search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைரேகை பதிவு
    X
    கைரேகை பதிவு

    நீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு

    எம்.பி.பி.எஸ். முதலாண்டு மாணவ-மாணவிகளின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக உதித்சூர்யா, ராகுல், பிரவின், இர்பான், பிரியங்கா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நடந்த விசாரணை மூலம் நீட் தேர்வில் மேலும் சில மாணவ-மாணவிகள் முறைகேடு செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகமும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த முதலாண்டு மாணவ-மாணவிகளின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன.

    அவர்களது ஹால் டிக்கெட், புகைப்படங்கள் மற்றும் கையெழுத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து எம்.பி.பி.எஸ். முதலாண்டு மாணவ-மாணவிகளின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் நேற்று தனி தனியே இ-மெயில் மூலம் டீன்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “முதலாண்டு மருத்துவ மாணவர்களின் மூன்று கைரேகை பதிவுகளை சேகரித்து அனுப்புங்கள். அவை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

    கைரேகைப் பதிவுகளை மாணவர்கள் டீன் அலுவலகத்தில் வைத்து கொடுக்க வேண்டும். அப்போது அனாடமி, பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி ஆகிய மூன்று துறைகளின் பேராசிரியர்கள் முன்னிலையில் இது நடைபெற வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

    முதலாண்டு மாணவர்களிடம் கைரேகை பதிவு செய்யும் நடவடிக்கைகளை 5 நாட்களுக்குள் முடித்து, அதை ‘சீல்’ வைத்த உறையில் வைத்து அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் கைரேகைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறுகையில், “முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகை பதிவை அளிக்க வேண்டும். கைரேகை பதிவு தராதவர்கள் தொடர்ந்து வகுப்புகளில் அமர அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

    அவர் மேலும் கூறுகையில், “மாணவர்களின் கைரேகை பதிவுகளை தடயவியல் பரிசோதனை செய்வதன் மூலம் ஆள் மாறாட்டம் செய்து மாணவர்கள் யாராவது மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கிறார்களா? என்பதை துல்லியமாக கண்டுபிடித்து விட முடியும்” என்றார்.

    நீட் தேர்வு

    நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். தனிப்படைகள் அமைத்து மற்ற மாநிலங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். என்றாலும் இதுவரை ஆள் மாறாட்டத்துக்கு உதவி செய்த யாரும் பிடிபடவில்லை.

    சில மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×