search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள்
    X
    சிறப்பு பஸ்கள்

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து 10,940 பஸ்கள் இயக்கம்

    தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு 10,940 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை செயலாளர் கூறியுள்ளார்.
    சென்னை:

    தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முக்கிய பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்று திரும்பிட வசதியாக, போக்குவரத்துத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    எம்ஆர் விஜயபாஸ்கர்

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் 2 கூட்டங்கள் நடந்தன. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் எனது (பி.சந்திரமோகன்) தலைமையில் நடைபெற்றது.

    இதில் தீபாவளி பண்டிகைக்கு எந்தெந்த பஸ் நிலையங்களில் இருந்து எத்தனை சிறப்பு பஸ்களை இயக்குவது? என்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி சென்னை கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, மாதவரம் புதிய பஸ் நிலையம், தாம்பரம் ரெயில்நிலைய பஸ் நிறுத்தம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக்கழக கே.கே.நகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,225 பஸ்களுடன், 3 நாட்களும் சேர்த்து சிறப்பு பஸ்களாக 4,265 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இதன்மூலம் அந்த 3 நாட்களும் மொத்தம் 10,940 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதைப்போல பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக திருப்பூர் மற்றும் கோவையில் இருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் நெல்லை ஆகிய இடங்களுக்கு முறையே 1,165 மற்றும் 920 பஸ்கள் இயக்கப்படும். பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த பஸ்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக இணையதளங்களான www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகியவற்றின் மூலம் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ்களுக்கும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்யப்படுகிறது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே சிறப்பு பஸ்களுக்கு வசூலிக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு இதுவரை 33 ஆயிரத்து 870 பயணிகளும், பிற ஊர்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு 17 ஆயிரத்து 338 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×