search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் - கண்ணம்மாள்
    X
    தம்பதி புதைக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் - கண்ணம்மாள்

    நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை - அக்காள் உள்பட 4 பேர் சிக்கினர்

    வெள்ளகோவிலில் மனைவியுடன் நிதி நிறுவன அதிபரை கொன்று புதைத்த விவகாரம் தொடர்பாக அவருடைய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்.
    வெள்ளகோவில்:

    திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி (42). இவர்களது மகன் பாஸ்கர் (27) என்பவருக்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    திருமண பத்திரிகை கொடுப்பதற்காக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசில் உள்ள தனது அக்காள் கண்ணம்மாள் (54) என்பவர் வீட்டிற்கு காரில் சென்ற செல்வராஜூம், அவரது மனைவி வசந்தாமணியும் வீடு திரும்பவில்லை. மேலும் அவர்கள் சென்ற கார் கரூர் அருகே அனாதையாக நின்றது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, இருவரும் கொலை செய்யப்பட்டு கண்ணம்மாளின் வீட்டின் அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கண்ணம்மாளை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல் வருமாறு:-

    செல்வராஜின் தந்தை காளியப்ப கவுண்டருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை செல்வராஜின் மகன் பாஸ்கர் பெயரில் காளியப்பகவுண்டர் உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அந்த 4 ஏக்கர் நிலத்தை ரூ.43 லட்சத்திற்கு செல்வராஜ் விற்பனை செய்துள்ளார். அதில் தனக்கு ரூ.5 லட்சம் கொடு என்று கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் செல்வராஜ் ரூ.1 லட்சம் மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணம்மாள், பரம்பரை சொத்தை விற்று தம்பி குடும்பம் மட்டும் அனுபவிப்பதா? என்று ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் பாஸ்கரின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த செல்வராஜையும், அவருடைய மனைவியையும், மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து, தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்று பிணத்தை வீ்ட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாக கண்ணம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று நாகேந்திரனையும் பிடித்து வந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தம்பதியை வெள்ளகோவிலில் கொன்று அங்கேயே உடல்களை புதைத்து விட்ட நிலையில், அவர்கள் சென்ற கார் மட்டும் கரூர் அருகே அனாதையாக நின்றது. மேலும் காரை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    எனவே கொலையை மறைத்து, காரை வெள்ளகோவிலில் இருந்து கரூர் சுக்காலியூருக்கு ஓட்டிச்சென்ற நாகேந்திரன், அத்தை கண்ணம்மாளின் ஆலோசனைபடி காரை சுற்றி மிளகாய் பொடி தூவியதோடு, காரை அனாதையாக விட்டு சென்று கடத்தல் நாடகம் ஆடி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×