search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
    X
    கோவையில் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

    கோவை மாநகராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் எம்.எல்.ஏ., உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், தனியாருக்கு குடிநீர் வழங்குவதை கண்டித்தும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த மாதம் 27-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொழில் அதிபர்கள், வணிகர்கள், வியாபாரிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்த நிலையில் முழு அடைப்பு போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த நிலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்காக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தி.மு.க. எம்.எல்.ஏ, நா. கார்த்திக் போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார்.

    போலீசார் இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தாலும், கோர்ட்டில் இந்த வழக்கு வருகிற 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் மேலும் ஐகோர்ட்டு என்ன காரணத்துக்காக தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளதோ, மீண்டும் அதே காரணத்துக்காக வேண்டி மனுதாரர் ஆர்ப்பாட்டம் நடத்த கோரியுள்ளதால் மேற்படி இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாநகர போலீஸ் சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனாலும் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., ஆதிதமிழர் பேரவையினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் வந்தனர். அவர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கையில் கொடியுடன் கோ‌ஷம் போட்டப்படி வந்தனர்.

    போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். 

    Next Story
    ×