search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்று நாங்குநேரி தொகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
    நெல்லை:

    நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நெல்லை வந்தார். நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பாளையஞ்செட்டிகுளம், அரியகுளம், மேலகுளம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவரிடம் குடிநீர் வசதி, சாலை வசதி, வேலைவாய்ப்பு, டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர். பொதுமக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    உங்களிடம் ஆதரவு கேட்க மட்டும் இங்கு வரவில்லை. உங்கள் ஊரில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்ன தேவைப்படுகிறது? என்பதை கேட்பதற்காகவே நேரில் வந்துள்ளேன். குடிநீர் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், முதியோர் ஓய்வுத்தொகை வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை சரியாக வழங்கவில்லை, ஊதியம் சரியாக வழங்கவில்லை என கூறினீர்கள். இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் இருக்கிறது.

    குடிநீர் வசதி, சாலை வசதி போன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரிய அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தாலே அதனை செய்துவிடலாம். ஆனால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் நேரத்தை வீணடிக்கிறது. மக்களுக்கு எந்த பணியும் செய்யாமல் காலதாமதம் செய்கிறது. தொழிற்சாலைகளை அமைத்தால் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் அதனை இந்த அரசு செய்யவில்லை.

    இந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரவேண்டுமானால் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அ.தி.மு.க. 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் 60 முதல் 70 சதவிகித பணிகளை முடித்திருக்க முடியும். நீங்கள் கூறிய அனைத்து பிரச்சனைகளும் மிகச்சிறிய பிரச்சனைகள் தான்.

    இந்த பிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவோம்.

    கருணாநிதி காலத்தில் தான் தண்ணீர் கிடைத்தது. இருபோகம் விளைந்தது என்று சொல்கிறீர்கள். அவர் தான் எங்களை உருவாக்கியிருக்கிறார். அவருடைய பணியை நாங்கள் தொடர வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கி கொடுப்போம்.

    அமைச்சர்கள் பலர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள். பல கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×