search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    தி.மு.க.வை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    தி.மு.க.வை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நாங்குநேரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

    களக்காடு:

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எல்லா சமுதாய மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி திகழ்கின்றது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆட்சிக்கு அதிகமான ஆதரவு உள்ளது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற மின்வெட்டு, கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு தமிழக மக்கள் மனதில் இன்றும் எரிந்து கொண்டு தான் இருக்கின்றது. தற்போது ஆட்சியில் அவை இல்லை. அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

    இந்த ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகின்றனர். அ.தி.மு.க. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழக முதல்வராக நீடிப்பார். அ.தி.மு.க. ஆட்சியை கலைக்கவே முடியாது என்று மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். இருந்த போதிலும் அவநம்பிக்கையில் மீண்டும் மீண்டும் முயற்சி எடுத்து வருகின்றார்.

    தி.மு.க.வை ஒரு காலமும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் வெற்றி பெற்றார் என்ற வெற்றி செய்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் கிடைக்க வேண்டும்.

    நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் தான் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டன. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்கம் கட்டப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வடக்கு பச்சையாறு நிர்த்தேக்க தொட்டியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா புதிய அணைகளை கட்டினார்கள். பாதுகாத்தார்கள். தற்போதையஆட்சியில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆட்சி தொடர்ந்திட, சாதனைகள் தொடர்ந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×