search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    நாங்குநேரி தொகுதியில் மு.க.ஸ்டாலின் நாளை தேர்தல் பிரசாரம்

    நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதற்கட்ட பிரசாரத்தை நாளை தொடங்குகிறார்.
    நெல்லை:

    நாங்குநேரி தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அந்த தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஆதரவாக 12 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அந்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், மூத்த தலைவர் குமரி அனந்தன், எம்.பி.க்கள் வசந்தகுமார், திருநாவுக்கரசர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    மேலும் தலைவர்கள் வருகையால் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 15, 16, 18 ஆகிய தேதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதற்கட்ட பிரசாரத்தை நாளை (9-ந் தேதி) தொடங்குகிறார். நாளை மாலை 4 மணிக்கு தனது பிரசாரத்தை ஏர்வாடியில் தொடங்கும் மு.க.ஸ்டாலின், திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, கீழகருவேலங்குளம், சடையமான்குளம் விலக்கு ஆகிய இடங்களிலும் பொது மக்களிடம் பேசி ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்.

    நாளை மறுநாள்(10-ந் தேதி) நாங்குநேரி பேரூர், பரப்பாடி, இட்டமொழி, வடக்கு விஜயநாராயணம், முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பேசுகிறார். அவர் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாங்குநேரி தொகுதியில் நேற்று முதற்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அவர் வருகிற 14, 15, 18 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். இதேபோல் கனிமொழி எம்.பி. 11, 12, 13 ஆகிய தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    Next Story
    ×