search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் விலை உயர்வு

    கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவாக இருப்பதால் பழங்கள் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் வரத்து அதிகமானதால் விலை சற்று குறைந்துள்ளது.
    சென்னை:

    பண்டிகை மற்றும் விசே‌ஷ காலங்களில் பூக்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் விலை உயர்வது வழக்கம். ஆயுத பூஜை திங்கட்கிழமை வருவதால் நேற்று வெள்ளிக்கிழமையே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

    இதனால் பூக்கள் மற்றும் பழங்கள் விலை நேற்று, உயர்வாக இருந்தன. மல்லிகைப்பூவின் விலை மிகவும் உயர்ந்து இருந்தது. சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கிலோ ரூ.1400 ஆக இருந்த போதிலும் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.900 க்கு விற்றது.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று இருந்ததை விட இன்று பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. ஆயுத பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய சாமந்திபூ, சென்ட் மல்லி, கோழி கொண்டை ஆகியவற்றின் விலை குறைந்தது.

    சாமந்தி பூ ஒரு கிலோ நேற்று ரூ.160 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டது. இன்று அதன் விலை ரூ.140 முதல் ரூ.160 வரை விற்கப்படுகிறது.

    ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் கடப்பாவில் இருந்து சாமந்தி பூக்கள் கோயம்பேட்டிற்கு வருகின்றன. இன்று பூக்கள் அதிகளவு வந்ததால் விலை குறைந்தது.

    சென்ட் மல்லி, கோழி கொண்டை கிலோ ரூ.60-70 விலையில் விற்கப்படுகிறது. விலை குறைந்த போதிலும் விற்பனை மந்தமாக இருப்பதாக கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் மூக்கையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    ஆயுத பூஜைக்கான பூக்கள் விற்பனை நேற்று சிறப்பாக இருந்தது. நல்ல விலையும் கிடைத்தது. ஆனால் இன்று வரத்து அதிகமானதால் விலை சற்று குறைந்துள்ளது. வியாபாரமும் விறுவிறுப்பு இல்லை. நாளைதான் வியாபாரம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நேற்று பூக்கள் வரத்து குறைவாக இருந்ததால் விலை அதிகமாக இருந்தது. இன்று விலை குறைந்துள்ளது. நாளையும் விலை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விலை கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நேற்று 40 லாரிகளில் பூக்கள் வந்தது. இன்று அது 70 லாரிகளாக உயர்ந்ததே விலை குறைவிற்கான காரணம்.

    மல்லிகைப்பூவை பொறுத்தவரை கோயம்பேட்டில் கிலோ ரூ.900க்கு விற்கப்படுகிறது. ஜாதி முல்லை ரூ.300ல் இருந்து ரூ.160 ஆகவும், முல்லைப் பூ ரூ.400-ல் இருந்து ரூ.450 ஆகவும், சம்பங்கி கிலோ ரூ.240 ஆகவும் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆயுத பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய சாத்துக்குடி, கொய்யாப்பழம், ஆப்பிள் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. இந்த வருடம் வரத்து குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து மொத்த பழ வியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

    ஆயுத பூஜை காலத்தில் பழங்கள் அதிகளவு வருவது உண்டு. இந்த ஆண்டு குறைந்த அளவில் வருகின்றன. 60 லாரிகளில் பழங்கள் வருவது வழக்கம். ஆனால் தற்போது 40 லாரிகளில் தான் வருகின்றன. இதனால் விலை சற்று அதிகரித்துள்ளது.

    சாத்துக்குடி மொத்த விலையில் கிலோ ரூ.55 முதல் ரூ.65 வரை விற்கப்படுகிறது.

    ஆப்பிள் கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை தரம் வாரியாக விற்கப்படுகிறது. விற்பனை நன்றாக இருக்கிறது. இன்றும், நாளையும் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×