search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர் செல்வம்
    X
    ஓ பன்னீர் செல்வம்

    விக்கிரவாண்டி தொகுதியில் தலைவர்கள் தேர்தல் பிரசாரம்

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச் செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி மற்றும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், இயக்குனருமான கவுதமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்பட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க- தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இரு வேட்பாளர்களும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதனால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வருகிற 14, 15 மற்றும் 18-ந் தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிக்கிறார்.

    அதுபோல் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வருகிற 13, 14, 17 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் பல்வேறு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க, தே.மு.தி.க.வினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளார். அவர் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    அதன் பின்னர் மீண்டும் 18, 19 ஆகிய தேதிகளிலும் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.

    தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி. இன்று மாலை 4.30 மணிக்கு மூங்கில்பட்டு கிராமத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணிக்கு மதுரப்பாக்கத்திலும், 5.30 மணிக்கு ராதாபுரத்திலும், 6.30 மணிக்கு தொரவியிலும், 7 மணிக்கு பனையபுரத்திலும், 7.30 மணிக்கு முண்டியம்பாக்கத்திலும் வேன் மூலம் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விக்கிரவாண்டி ஏ.ஆர்.எஸ்.எம். திருமண மண்டபத்தில் மகளிரணி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசுகிறார்.

    மாலை 4.30 மணிக்கு விராட்டிக்குப்பம் கே.வி.ஆர். நகர் பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 5 மணிக்கு திருவாமாத்தூரிலும், 5.30 மணிக்கு தென்னமாதேவியிலும், 6 மணிக்கு தும்பூரிலும், 6.30 மணிக்கு ஒரத்தூரிலும், 7 மணிக்கு சிந்தாமணி யிலும், 7.30 மணிக்கு விக்கிரவாண்டியிலும் பிரசாரம் செய்கிறார்.

    அதேபோல் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலினும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார்.

    வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் போட்டியிடுகிறார். அந்த வேட்பாளரை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் அருகே இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
    Next Story
    ×