search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவரை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவரை படத்தில் காணலாம்.

    வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது

    மன்னார்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமராஜர் சிலை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் காரில் இருந்த சாக்கு மூட்டைகள் குறித்து போலீசார் கேட்டபோது டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அப்போது திடீரென காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அவைகளில் கஞ்சா இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காரில் 11 சாக்குமூட்டைகளில் இருந்த 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் காரில் இருந்த  டிரைவரிடம் விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் பாண்டியன் (வயது33) என்றும், இந்த கஞ்சாவை வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரில் இருந்து வேறுபட்ட பதிவு எண்கள் கொண்ட போலி நம்பர் பிளேட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர். 

    இந்த கஞ்சாவை வேளாங்கண்ணியில் யாருக்கு கொடுக்க பாண்டியன் கடத்தி வந்தார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் இருந்து தப்பி ஓடிய நபர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×