search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்த தென்மேற்கு பருவ மழை

    குமரி மாவட்டத்தில் இயல்பை காட்டிலும் 4 மாதங்களில் 42.64 மில்லி மீட்டர் கூடுதலாக தென்மேற்கு பருவ மழை பெய்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும்.

    கோடை மழையை தொடர்ந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கும். ஜீன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 4 மாதங்களுக்கு இந்த மழை நீடிக்கும்.

    இந்த காலகட்டத்தில் தான் குமரியின் முக்கிய நீர் ஆதாரங்கள் தண்ணீர் பெறும். இந்த 4 மாதங்களில் குமரி மாவட்டத்தில் இயல்பாக 551.70 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் 159.48 மில்லி மீட்டரும், ஜூலை மாதம் 74.57 மில்லி மீட்டரும், ஆகஸ்டு மாதம் 196.44 மில்லி மீட்டரும், செப்டம்பர் மாதம் 163.85 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆக மொத்தம் 4 மாதங்களிலும் 594.34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இது இயல்பை காட்டிலும் 42.64 மில்லி மீட்டர் அதிகமாகும். இதனை குமரி மாவட்ட பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை 657.88 மில்லி மீட்டர் பெய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு 594.34 மில்லி மீட்டரே பெய்துள்ளது.

    இது இயல்பை காட்டிலும் அதிகம் என்றாலும், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைவே ஆகும்.

    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். இந்த கால கட்டத்திலும் நமக்கு அதிக மழை பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் மட்டும் அதிக மழை பொழிவு இருந்தது.

    இந்த ஆண்டும் இதுபோன்ற மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தில் ஓராண்டுக்கு இயல்பாக 1443 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்த ஆண்டு 1470.76 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்திருந்தது.

    இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 759.36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இனி 3 மாதங்கள் மீதமுள்ளன.

    இந்த மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். அப்போது கூடுதல் மழை கிடைக்கும் என விவசாயிகளும், பொதுப் பணித்துறை அதிகாரிகளும் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு மழை பெய்யும்போது சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்ததால் கடந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் போதுமான அளவுக்கு தேக்கப்படவில்லை.

    இப்போது அணையின் பராமரிப்பு பணிகள் முடிந்துவிட்டன. இதனால் அணையில் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க முடியும். இப்போதே அணையில் 26 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. வடகிழக்கு பருவ மழை கைகொடுத்தால் அணையின் நீர் மட்டம் உயர்ந்து அடுத்த சாகுபடி பணிகளுக்கு பயன்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பெருஞ்சாணி மற்றும் சிற்றார் அணைகளிலும், மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளிலும் கணிசமான நீர் இருப்பு இருப்பதால் குமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×