search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு விபத்தில் சேதமடைந்த டெய்லர் கடை முன்பு திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
    X
    பட்டாசு விபத்தில் சேதமடைந்த டெய்லர் கடை முன்பு திரண்டிருந்த பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

    செஞ்சி அருகே பட்டாசு வெடித்து 2 பேர் பலி

    செஞ்சி அருகே இன்று காலை பட்டாசு வெடித்து சிதறியதில் கடையில் இருந்த 2 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 9பேருக்கு காயம் ஏற்பட்டது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து பட்டாசு பண்டல்கள் ஏற்றி வேன் ஒன்று இன்று காலை செஞ்சி நோக்கி புறப்பட்டது. வேனில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

    இந்த வேன் செஞ்சி வடவானூர் அருகே சென்ற போது வேனில் புகை கிளம்பியது. எனவே அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்தவர்கள் வேனில் புகை வந்ததை பார்த்து கூச்சல் போட்டு எச்சரித்தனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து வேனில் இருந்த 3 பேரும் கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் வேனில் தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேனில் இருந்த பட்டாசுகள் வெடிக்க தொடங்கியது. ஒட்டு மொத்தமாக அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது.

    இந்த பட்டாசுகளின் தீப்பிழம்பு சாலை ஓர கடைகளுக்குள் ராக்கெட்டுகள் போன்று சீறி பாய்ந்தது. அங்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இந்த பட்டாசு விபத்தில் சலூன்கடையில் இருந்த நபர் ஒருவரும், டெய்லர் கடையில் இருந்த ஓருவரும் உடல் கருகி இறந்தனர். அவர்களது பெயர் விவரம் தெரியவில்லை.

    இதை பார்த்ததும் அந்த பகுதியில் நின்றவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறி அந்த பகுதியில் உள்ள கூரை வீட்டுக்குள்ளும் புகுந்தது.

    அப்போது சாலைஓரம் நின்று கொண்டிருந்த நந்திலி கொண்டான் கிராமத்தை சேர்ந்த தனசெல்வன் (வயது 30), ரங்கசாமி (60), கல்பனா (25), மோகன், லாவண்யா, மாரியம்மாள், கொங்காரப்பட்டு செந்தில் வேலன் (45), வடவானூர் ஆயிஷா பீவி (38), உள்பட 9 பேர் பட்டாசு விபத்தில் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் அந்தபகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வேனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் வேன் உருக்குலைந்து எரிந்து நாசமானது.

    பட்டாசு விபத்தில் படுகாயம் அடைந்த 9 பேரும் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் தனசெல்வன், ஆயிஷாபீவி, கல்பனா ஆகியோரது நிலைமை மோசமானது. எனவே அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது.

    மற்ற 6 பேரும் செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

    விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். வேனில் இருந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×