search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கடலை சுற்றிப்பார்க்க சென்ற போலீசார் - 7 மூட்டை கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    முத்துப்பேட்டையில் கடலை சுற்றிப்பார்க்க சென்ற போலீசார் 12½ லட்சம் ரூபாய் மதிப்பிலான 7 மூட்டை கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதி ஆசியாவின் மிகப்பெரிய அலையாத்தி காடாகவும் சுற்றுலா காடாகவும் விளங்கி வருகிறது. அலையாத்தி காட்டில் இருந்து ஒரு மணி நேரம் படகில் செல்லும் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டையில் தங்கம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்ந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோ திவ்யன் விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் திருவாரூர் டி.எஸ்.பி. பொன்னுச்சாமி (பொறுப்பு) அதிகாரியாக 2 தினங்களாக பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று டி.எஸ்.பி. பொன்னுச்சாமி மற்றும் போலீசார் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டை சுற்றிப்பார்க்கும் ஆசையில் வனத்துறை படகில் கடலுக்கு புறப்பட்டனர்.

    வன காவலர் ராமஜெயம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, போட்மேன் செல்வராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

    ஒவ்வொரு பகுதியாக கடல் முகத்துவாரம் கடந்து வெட்டாறு திட்டு பகுதி அருகே படகு சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் 3 பேர் மீன்களை தீயில் வாட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை கண்டதும் படகை நிறுத்திய போலீசார், ‘சுட்ட மீன் கிடைக்குமா? என்று கேட்டனர்.

    இதை சற்றும் எதிர் பார்க்காத மூவரும் போலீசாரை கண்டதும் பதறியப்படி பதிலளிக்காமல் மீன்களை அதே இடத்தில் போட்டு விட்டு தப்பி ஓடினர்.

    இதனால் சந்தேகமடைந்த போலீசார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகை சோதனையிட்டனர். அதில் 7மூட்டைகளில் சுமார் 300 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து படகையும், கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த கஞ்சா இலங்கைக்கு கடத்த படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதா? அல்லது இலங்கையில் இருந்து தமிழகப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பிடிபட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 12½ லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×