search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    மாணிக்கம்தாகூர் எம்.பி. குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி- ராஜவர்மன் எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்

    மாணிக்கம்தாகூர் எம்.பி. பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் ராஜவர்மன் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

    அவரது பேச்சு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் கூட்டத்தில் பங்கேற்ற ராஜவர்மன் எம்.எல்.ஏ. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சாத்தூர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், சாத்தூர் நகர தலைவர் கருப்பசாமி ஆகியோர் இந்த புகாரை அளித்துள்ளனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்து அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஸ்ரீராஜாசொக்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், விருதுநகர் நகர தலைவர் வெயிலுமுத்து ஆகியோர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாணிக்கம் தாகூர் எம்.பி. விருதுநகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமெரிக்கா சென்று வந்ததில் இருந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தடுமாற்றத்துடனேயே பேசி வருகிறார். ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினை விமர்சித்த அவர், தற்போது என்னையும் அவதூறாக பேசி உள்ளார். அவரது பேச்சு குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் டி.ஜி.பி.யிடம் புகார் அளிப்பேன். மேலும் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.

    மேலும் நான் எம்.பி.யாக இருப்பதால் அமைச்சரின் மிரட்டல் பேச்சு தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் மூலம் பாராளுமன்ற உரிமை குழுவிடம் முறையிட உள்ளேன். அந்த குழுவில் உள்ள மூத்த எம்.பி.க்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், திருத்தங்கல்-சிவகாசி இடையே ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் தடையாக உள்ளார் என்றார்.
    Next Story
    ×