search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி
    X
    நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த காட்சி

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.

    தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க.வில் நேற்று முதல் விருப்பமனு நடந்து வருகிறது. இன்று மாலையில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடக்கிறது. அதன்பிறகு அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    தி.மு.க.விலும் நேற்று விருப்ப மனு வினியோகம் தொடங்கியது. இன்றும் விருப்பமனுக்கள் வினியோகிக்கப்பட்டன. நாளை தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நடக்கிறது.

    இந்த இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது.

    நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. நாங்குநேரி தொகுதியில் வேட்பு மனுக்களை பெறுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    அங்கு காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்கள் கொடுக்கலாம். நாங்குநேரி தாசில்தார் ரஹ்மத்துல்லாவிடமும் வேட்புமனு கொடுக்க விரும்புகிறவர்கள் கொடுக்கலாம்.

    வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் அதிகாரி அலுவலகத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டு, வேட்பாளர் மற்றும் அவருடன் 4 முக்கிய பிரமுகர்கள் என 5 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனால் போலீசார் 100 மீட்டர் பகுதியில் இருந்தே கண்காணிப்பு கேமரா உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    வேட்புமனு தாக்கலின் முதல்நாளான இன்று பிரதான கட்சி சார்பாக யாரும் வரவில்லை. சுயேட்சை வேட்பாளர்கள் காலை 10 மணிக்கே அங்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்காக விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து வருகிறார்கள்.

    இன்று பிற்பகல் அந்த சுயேட்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் தாலுகா அலுவலகம் தேர்தல் அலுவலகமாக அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இன்று பகல் 12 மணிக்கு சுயேட்சை வேட்பாளராக அக்னி ஸ்ரீராமன் மனுதாக்கல் செய்தார்.

    வேட்புமனுதாக்கல் தொடங்கியதை யொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    வேட்புமனு தாக்கலுக்கான கடைசிநாள் வருகிற 30-ந்தேதி ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப்பெற விரும்புபவர்கள் அக்டோபர் 3-ந்தேதி பெற்றுக்கொள்ளலாம்.

    அன்று வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 21-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 24-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×