search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இட்லி- வடை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராணிபாட்டி.
    X
    இட்லி- வடை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள ராணிபாட்டி.

    ராமேஸ்வரத்தில் இல்லாதவர்களுக்கு இலவசமாக இட்லி வழங்கும் ராணிபாட்டி

    ராமேஸ்வரத்தில் பசியென்று வரும் ஏழைகளுக்கு பணம் வாங்காமல் சுடச்சுட இட்லி தந்து பசியாற்றும் ராணிபாட்டி.

    ராமேசுவரம்:

    பசியுடன் வருபவர்களுக்கு உணவு வழங்கி புண்ணிய பூமியில் ஒரு புனித சேவையாற்றி வருகிறார் மூதாட்டி ஒருவர். அவர்தான் ராணி பாட்டி. புண்ணிய தலமான ராமேசுவரம், தென்னகத்து காசி என அழைக்கப்படுகிறது. இங்கு தான் ராணி பாட்டி பிரபலம். இதற்கு காரணம் குறைந்த விலையில் நிறைந்த தரத்துடன் உணவு வழங்கி வருவதுதான்.

    அகஸ்தியர் தீர்த்தம் பகுதியில் கடந்த 36 ஆண்டுகளாக இட்லி கடை நடத்தி வரும் ராணி பாட்டி, கடந்த 5 ஆண்டுகளாக அக்னிதீர்த்த கடற்கரை செல்லும் சாலையில் கடை நடத்தி வருகிறார்.

    கிழிந்த தார்பாயின் கீழ் நடைபெற்று வரும் இந்த கடையில் 4 இட்லி, ஒரு வடை குறைந்த விலைக்கு கொடுக்கிறார்.

    2 வகை சட்னி, சாம்பாருடன் சுடச்சுட வழங்கப்படும் இட்லி, வடையை சாப்பிட ஒரு கூட்டமே அங்கு திரள்கிறது.

    தினசரி வாடிக்கையாளர்கள் தவிர, யாத்ரீகர்களும் ராணி பாட்டியின் கடையை கேள்விப்பட்டு உணவருந்த வருகின்றனர். அதில் பலர் கையில் காசு இல்லை என்றாலும், அவர்களின் பசியாற்றி வருகிறார் ராணி பாட்டி.

    விறகு அடுப்பு புகையில் கண் எரிச்சல் ஏற்பட்டாலும் வாடிக்கையாளர்களிடம் அதனை காட்டாமல் அவர்களின் பசியாற்றி வந்த அவர், சமீபத்தில்தான் கியாஸ் அடுப்புக்கு மாறியுள்ளார். இது பற்றி ராணி பாட்டி கூறியதாவது:-

    தனுஷ்கோடியில் பிறந்த நான் 1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு பின்னர் பெற்றோருடன் ராமேசுவரத்திற்கு வந்தேன். தற்போது கணவர் நாராயணனுடன் அக்னிதீர்த்த கடற்கரை அகஸ்தியர் தீர்த்தம் பகுதியில் வசித்து வருகிறேன்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை யோரத்தில் இட்லி கடை நடத்தி வருகிறேன். கிடைக்கும் வருவாயை சிக்கனமாக பயன்படுத்தி, 2 மகன்கள், மகளை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளேன். கையில் காசில்லை என்றாலும் பசியோடு வந்தால் அவர்களது பசியாற்றுவதில்தான் ஆனந்தம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேசுவரம் வந்த இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரியின் உதவியால் விறகு அடுப்பில் இருந்து கியாஸ் அடுப்புக்கு மாறியுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×