search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

    சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நலன் கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமேசுவரத்திற்கு வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

    குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகளும் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் வரும் பக்தர்களும் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.இதுபோல் உள்ளூர் மக்களும் வெளியூர் சென்று திரும்புவதற்கு ரெயில் பயணத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றனர்.

    தற்போது ராமேசுவரத்திற்கு வந்து செல்லும் அனைத்து ரெயில்களும் அதிகாலையில் வந்து மாலையில் திரும்பும் வகையிலேயே உள்ளது. பகல் நேரத்தில் மற்றும் இரவில் செல்வதற்கு போதிய ரெயில் வசதி இல்லை. சென்னையிலிருந்து புறப்பட்டு காலையில் வரும் 2 ரெயில்களும் மாலையில் புறப்படுகிறது.

    மதுரை-ராமேசுவரம் அகல ரெயில்பாதை தொடக்கப்படும் போது, அதிகளவில் வெளி மாநிலங்களுக்கு நீண்ட தூர ரெயில்கள், பகல் மற்றும் இரவு நேரத்தில் சென்னை மற்றும் கோவைக்கு இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை சென்னைக்கு பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படவில்லை.

    ராமேசுவரத்திற்கு ஆய்வு செய்ய வரும் ரெயில்வே உயர் அதிகாரிகள் ரெயில் பெட்டிகள் தட்டுப்பாடு இருப்பதால் கூடுதல் ரெயில்கள் இயக்க முடியவில்லை என்ற பல்லவியை தெரிவிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

    ராமேசுவரத்திற்கு தற்போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இவர்களின் பயணங்களுக்கு ஏற்றவாறு கூடுதல் ரெயில்கள் இயக்கப்படாததால் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். அதிலும் குடும்பமாக வரும் சுற்றுலா பயணிகள் பகல் நேரத்தில் ரெயில் இல்லாத நிலையில் பஸ்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ரெயில் கட்டணத்தைவிட பஸ் கட்டணம் பன்மடங்கு கூடுதலாக உள்ளதால் வசதி இல்லாதவர்கள் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ராமேசுவரத்தில் இருந்து சென்னை பகல் நேர எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்கவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ் கனி தொடர்ந்து இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×