search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின்
    X
    இடைத்தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின்

    விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிப்பு- மு.க.ஸ்டாலின்

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது, 24-ம் தேதி அறிவிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    சென்னை:

    மகாராஷ்டிரா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள 64 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அதே தேதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், தமிழகத்தில் உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுவையில் உள்ள காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியும் அடங்கும். இதற்கான வேட்பு மனு தாக்கல் 23-ம் தேதி தொடங்க உள்ளது.

    தமிழகம் மற்றும் புதுவையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. திமுக தனது பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைத்துவிட்டு தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது.

    திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24-ம் தேதி  தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    அண்ணா அறிவாலயம்

    அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை மறுநாள் (23-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் விருப்ப மனுக்களை ஒப்படைக்க வேண்டும் என்றும், வேட்பாளர் நேர்காணல் செப். 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    விண்ணப்ப படிவம் ரூ.1000 ஆகவும், வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.25 ஆயிரம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை மறுநாள் சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். 
    Next Story
    ×