search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு
    X
    நீட் தேர்வு

    ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் - மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் விசாரணை

    தமிழ்நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களிடம் இன்று 2-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்களா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.
    தேனி:

    சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மகன் உதித் சூர்யா (வயது 21) பிளஸ்-2 முடித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்ந்தார்.

    உதித் சூர்யா

    இவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்துள்ளார் என டீன் ராஜேந்திரனுக்கு மின்னஞ்சலில் புகார் வந்தது. இதில் ஆள் மாறாட்டம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மாணவன் தான் படிப்பை தொடர விரும்பவில்லை என கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னையில் வெங்கடேசன் வீட்டுக்கு சென்றபோது அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரி பார்க்குமாறு சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் பற்றிய விசாரணை நேற்றே தொடங்கியது.

    தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகள் 13 உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 3,250 பேர் படிக்கிறார்கள்.

    சுயநிதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1,800 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் 150 பேரும் கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 100 பேரும், பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் 100 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் 5,400 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். பல் மருத்துவ கல்லூரிகளில் 1,940 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தும் பணி தொடங்கி உள்ளது.

    இதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் துணை முதல்வர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் 3 பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாணவர்களை தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்துகிறார்கள்.

    நீட் தேர்வில் வெற்றி பெற்று சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாணவனின் 10-ம், 12-ம் வகுப்பு சான்றிதழ்களை பெறப்பெற்று ஆய்வு செய்கின்றனர். மேலும் மாணவர்களின் புகைப்படங்களையும் பார்த்து இவர் உண்மையான மாணவர் தானா? என்றும் சோதிக்கப்படுகிறது.

    இதுதவிர ஒவ்வொரு மாணவரும் வகுப்புக்கு அழைத்து செல்லப்பட்டும் ஆய்வு நடக்கிறது. இதில் குளறுபடிகள், சந்தேகங்கள் இருந்தால் அடுத்தக்கட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    சந்தேகப்படும் வகையில் எந்த மாணவராவது இருந்தால் 24 மணி நேரத்துக்குள் மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று அரசு பொது மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இன்று 2-வது நாளாக தமிழ்நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

    தேனி அரசு மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யாவுடன் சேர்த்து 100 மாணவர்கள் நடப்பாண்டில் சேர்ந்தனர்.

    தற்போது உதித் சூர்யா வெளியேறி விட்டதால் மற்ற 99 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. கல்லூரி டீன் ராஜேந்திரன் தலைமையில் துணை முதல்வர் எழில் அரசன் மற்றும் பேராசிரியர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    இதனிடையே கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஹால்டிக்கெட்டுகளையும் ஒப்பிட்டு பார்த்து சோதனை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    நீட் தேர்வுக்காக கடுமையான பயிற்சிகளை எடுத்து பணம் செலவு செய்து தேர்வு எழுதி கல்லூரியில் இடம் பிடிக்க மாணவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் பணம் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் இடம் பிடிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் கல்லூரி டீன் ராஜேந்திரனுக்கு க.விலக்கு போலீஸ் நிலையத்தில் இருந்து ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் மாணவன் உதித் சூர்யா ஆள் மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்தது எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டது? மாணவன் கல்லூரியில் இருந்து விலகிய பிறகு சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கை விபரம் மற்றும் மற்ற மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டதில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×