search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்

    கோவை அருகே ஊருக்குள் புகுந்து பெண்ணை காட்டு யானை தாக்கிய சம்பவத்தால் தடாகம் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
    கவுண்டம் பாளையம்:

    கோவையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளது.

    இந்த யானைகள் அடிக்கடி தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது. இங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் செங்கல் சூளைகளில் புகுந்து அட்டகாசம் செய்கிறது. சில சமயம் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெண் ஒருவரை காட்டு யானை தாக்கிய சம்பவம் நடைபெற்று உள்ளது.

    கோவை தடாகம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு வட மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்குள்ள ஒரு செங்கல் சூளையில் அழகுபாண்டி அவரது மனைவி பாண்டி செல்வி (38) ஆகியோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை குட்டியுடன் வந்த பெண் யானை தொழிலாளி அழகு பாண்டி வீட்டு சுவரை உடைத்தது. இந்த சத்தம் கேட்டு அழகுபாண்டி அவரது மனைவி பாண்டி செல்வி ஆகியோர் எழுந்தனர். அவர்கள் யானை வீட்டை இடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    யானையிடம் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது பெண் யானை தனது தும்பி கையால் பாண்டிச்செல்வியை பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அழகுபாண்டி சத்தம் போட்டார்.

    இந்த சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து குட்டியுடன் வந்த பெண் யானையை மலை பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    பின்னர் காயம் அடைந்த பாண்டிச்செல்வியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×