search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.
    X
    திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

    திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு புதிய ரே‌ஷன் கார்டுகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி துவக்கி வைத்தார்.
    சென்னை:

    பொது விநியோகத் திட்டத்தினை முழுமையாக கணினிமயமாக்கும் திட்டத்தின்கீழ், பழைய காகித வடிவிலான குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நடைமுறை 1.4.2017 அன்று முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த காகித வடிவிலான அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாற்றாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது அனைத்து மின்னணு குடும்ப அட்டைகளும் மைய அளவில் சென்னையில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் போன்ற திருத்தங்கள் அனைத்தும் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாக பெறப்பட்டு, துறை அலுவலர்களின் கள ஆய்வுக்கு பின்னர் கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

    மைய அளவில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டும், பயனாளிகளுக்கு அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு ஏதுவாகவும், மாவட்ட அளவில் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதன் வாயிலாக, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரும் பயனாளிகளுக்கு மாவட்ட அளவிலேயே புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு விலையில்லாமல் வழங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும், நடைமுறையில் உள்ள மின்னணு குடும்ப அட்டைகளில் பயனாளிகள் கோரிய திருத்தங்களை உள்ளடக்கிய திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டையை, சம்மந்தப்பட்ட பயனாளிகள் ரூ.20/ கட்டணமாக செலுத்தி, மாவட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், சென்னையில் உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி, தற்போது மாவட்ட அளவில் பரவலாக்கப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கும் திட்டத்தின்கீழ் திருத்தி அச்சிடப்பட்ட மின்னணு குடும்ப அட்டைகளை 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி துவக்கி வைத்தார்.

    வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், பாச்சூர் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொட்டாரம் கிராமத்தில் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், இடையப்பட்டி கிராமத்தில் 2 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்புக் கிடங்குகள்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 8 சேமிப்புக் கிடங்குகள்; என மொத்தம், 12 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 சேமிப்புக் கிடங்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், கே.சி.வீரமணி, நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சுதா தேவி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் கண்ணன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் 1 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 காவலர் குடியிருப்புகள், இராயபுரத்தில் 3 கோடியே 88 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 28 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9ஆம் அணிக்காக 11 கோடியே 7 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 118 காவலர் குடியிருப்புகள்; சென்னை கண்ணகி நகர், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு மற்றும் கானத்தூர் ஆகிய இடங்களில் 3 கோடியே 18 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள்; சென்னை, அசோக் நகர், காவல் பயிற்சி பள்ளியில் 5 கோடியே 67 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம்; விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் 2 கோடியே 27 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆயுதக்கிடங்கு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 1 கோடியே 78 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள்; வேலூர் மாவட்டம் ஆலங்காயத்தில் 1 கோடியே 72 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 13 குடியிருப்புகள் என மொத்தம், 69 கோடியே 49 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி இன்று திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (குரூப் -1) மூலமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    சீன நாட்டின் செங்டுவில் 8.8.2019 முதல் 18.8.2019 வரை நடைபெற்ற உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை விளையாட்டுகள் 2019 போட்டியில் 77 நாடுகளைச் சேர்ந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டியில் தமிழ்நாடு காவல்துறையிலிருந்து பங்கேற்று 9 தங்கப் பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 7 வெண்கலப் பதக்கங்கள் வென்ற காவல்துறை ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் பாலு, முதல் நிலை காவலர்கள் தமிழரசி, கிருஷ்ண ரேகா மற்றும் அதிஸ்டம், காவலர்கள் பிரமிளா, உமா மகேஸ்வரி மற்றும் தங்கவசந்த் ஆகிய 9 காவல்துறை வீரர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து, பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
    Next Story
    ×