search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    இந்தி திணிப்பை ஏற்க முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    மொழி வாரியாக உள்ள இந்தியாவில் எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முயன்றாலும் பிரச்சனை ஏற்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தி திணிப்பு குறித்து ரஜினி அவர் மனதில் உள்ளதை தெரிவித்துள்ளார். விருப்பப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். மொழி வாரியாக உள்ள இந்தியாவில் எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிக்க முயன்றாலும் பிரச்சனை ஏற்படும்.

    அவரவர் மொழியை அந்தந்த மாநில மக்கள் நேசிப்பார்கள். அதேபோல் தமிழர்களாகிய நாமும் தமிழை நேசிக்கிறோம்.

    ஆட்சியில் உள்ளதால் இந்தி திணிப்பு குறித்து நாங்கள் வெளிப்படை தன்மையாக பேசவில்லை என்பதற்காக எங்களுக்கு தமிழ் மீது பற்றில்லை என கூறுவது தவறான கருத்து.

    இந்தி திணிப்பு நிலை ஏற்பட்டால் தமிழ் மொழிக்காகவும், தமிழ் உரிமைக்காகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. போராழியாக நின்று போராடுவோம்.

    இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா பேசவில்லை. இந்தி மொழி பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது.

    தமிழுக்காக உழைக்கும் கூட்டம் அ.தி.மு.க., தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் அ.தி.மு.க. அல்ல. தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் தலையை அடமானம் வைத்தாவது தடுப்போம்.

    தமிழுக்காக போராடுவோம், களம் காணுவோம். ஆனால் எந்த நிலையிலும் சமரசத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். தமிழகம் நிமிர்ந்து நிற்க அ.தி.மு.க. அரசு பாடுபடும்.

    கமல்ஹாசன் ஹைடெக் அரசியல் செய்து வருகிறார். வீடியோவில் பேசி கருத்தை வெளியிடும் ஹைடெக் அரசியல் தமிழகத்தில் எடுபடாது.

    சாமானிய மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோ வெளியிட்டு கருத்துக்களை பதிவிடுவதை யாரும் கேட்கமாட்டார்கள் கிண்டலடித்துவிட்டு செல்வார்கள்.

    பிரச்சனை மு.க.ஸ்டா லின் வழியாக வந்தாலும் கமல்ஹாசன் வழியாக வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    மன்னர் காலத்தில் செய்த சாதனைகளை தற்போது மக்களாட்சியில் செய்து சாதனை படைத்து வருகிறார் முதல்வர். அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டு பாதுகாக்கின்றனர், போற்றுகின்றனர்.

    விஜய் உள்ளிட்ட எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் வாக்களிப்பார்கள். வணிக ரீதியாக ஆவின் பொருட்கள் உலக அளவில் விற்பனையாகி வருவது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை. ஆவினில் உச்சகட்ட வெண்மை புரட்சி ஏற்பட்டு வருகிறது.

    நாள் ஒன்றிற்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் 50 லட்சம் லிட்டராக உயர்த்துவதே இலக்காக உள்ளது.

    விவசாயத்திற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய தொழிலாக பால் உற்பத்தி தொழிலை உருவாக்க கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×