search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை மருந்து விற்பனை செய்தவர்கள் குடியிருந்த வீடு
    X
    போதை மருந்து விற்பனை செய்தவர்கள் குடியிருந்த வீடு

    புதுவை அருகே போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் 2 பேர் கைது

    புதுவை அருகே போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் 2 பேர் நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேதராப்பட்டு:

    புதுவை பல்கலைக்கழகத்தில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இவர்களில் பலர் புதுவை அருகே உள்ள ஆரோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

    இதே போல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் வெளிநாட்டு மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். அவர்களும் இந்த மாணவர்களுடன் இணைந்து இங்கு தங்குவது வழக்கம்.

    அவ்வாறு இங்கு வசிக்கும் ஆப்பிரிக்க மாணவர்களில் சிலர் போதை மருந்துகளை விற்றதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஆரோவில் பெரிய முதலியார் சாவடியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 2 பெண் உள்பட 6 பேர் தங்கி இருந்தனர்.

    அவர்கள் போதை மருந்துகள் விற்பதாக தமிழக போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி.க்கள் ரியாவின், ஜூலியஸ் சீசர் தலைமையில் 2 வாகனங்களில போலீசார் நள்ளிரவு நேரத்தில் அந்த வீட்டுக்குள் வந்தனர்.

    வீட்டை சுற்றி வளைத்த அவர்கள் பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த 6 பேரையும் ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அதில் ஒரு பெண் 4 மாத கைக்குழந்தையுடன் இருந்தார்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அதில் இருந்த நைஜீரியாவை சேர்ந்த டாட்வின் டைகூ (வயது 43), உகாண்டாவை சேர்ந்த இளம்பெண் காகூ சஸ்துசா (26) ஆகியோர் கோக்கைன் போதை மருந்துகளை கடத்தி வந்து விற்பது தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

    இவர்கள் குடியிருந்த வீடு அசோகன் என்பவருக்கு சொந்தமானதாகும். அவரையும் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த வீட்டில் இருந்து போதை மருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×