search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருந்தில் மொய் பணம் செலுத்துவதற்காக காத்திருந்த மக்கள்
    X
    விருந்தில் மொய் பணம் செலுத்துவதற்காக காத்திருந்த மக்கள்

    தொழில் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும் ‘மொய் விருந்து’

    தொழில் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும் விழாவாக கொண்டாடப்படும் ‘மொய் விருந்து’ விழாவால் வயிறும், மனசும் ஒருசேர நிறைவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.
    சேதுபாவாசத்திரம்:

    ‘மொய்’ என்பது தமிழர்களின் கலாசாரத்துடன் இணைந்து விட்ட ஒரு சிறப்பம்சம். நட்பால் பிணைந்திருப்பவர்களை பண முடிப்பால் மகிழ்விக்கும் முறையே மொய். திருமண விழா, காதணி விழா, புதுமனை புகு விழா, பூப்புனித நீராட்டு விழா என அத்தனை விழாவுக்கும் உறவினர்கள், நட்பு வட்டத்தினர் சார்பில் மொய் பணம் மக்களால் வழங்கப்படுகிறது. மொய் கொடுக்க, கொடுக்க இரு தரப்பினருக்கும் மகிழ்ச்சி தான் விளையுமே தவிர அதனால் நஷ்டம் ஏதும் இல்லை.

    இல்ல விழாக்களை கொண்டாடுபவர்களுக்கு மொய் பணம் பல வகைகளிலும் கைகொடுக்கிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்கிறது. புதிதாக தொழில் தொடங்க, பின்பற்றும் தொழிலை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல, சேமிப்புகள் அதிகரிக்க என பல நன்மைகளை தரும் மொய்க்கென்றே தஞ்சை டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி பகுதியில் இது ஒரு முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதுதான் ‘மொய் விருந்து’ விழா.

    பேராவூரணி, திருச்சிற்றம்பலம், குருவிக்கரம்பை, நாடியம், ஆவணம், பைங்கால் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1980-ம் ஆண்டு முதல் மொய் விருந்து என்கிற கலாசார திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லங்களில் வேறு எந்த விழாக்களும் இல்லாமல் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து மொய் வாங்குவது மொய் விருந்து என்று அழைக்கப்படுகிறது.

    இதற்காக விருந்து நடத்தும் நபர்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து கறிவிருந்து கொடுத்து வருகின்றனர். இந்த திருவிழா வயிறையும், மனசையும் ஒரு சேர நிறைய செய்து மகிழ்விப்பதாக விழாவில் கலந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள். ஒருவராக மொய் விருந்து வைத்தால் செலவு அதிகமாக இருக்கும் என்பதால் 15 முதல் 20 நபர்கள் வரை இணைந்து ஒரே விருந்தாக கொடுக்கிறார்கள்.

    திருமணம், காதணி விழாக்கள் என்றால் சைவ விருந்துகள் கொடுக்கப்படும். ஆனால் மொய் விருந்து என்றால் அங்கு ஆட்டுக்கறி தான் பிரதானம். மொய் விருந்து நடத்த 500 கிலோ முதல் 1000 கிலோ வரை ஆட்டுக்கறி சமைக்கப்படுகிறது. பேராவூரணி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் மொய்விருந்து விழாக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

    ஆவணம், பைங்கால், குருவிக்கரம்பை, வீரியங்கோட்டை, நாடியம் உள்ளிட்ட பகுதிகளில் பொது பந்தல் அமைத்து மொய் வசூல் செய்கின்றனர். வழக்கமாக வைகாசி, ஆனி, ஆடி மாதத்தில் தான் மொய் விருந்துகளும், ஆவணி மாதத்தில் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆவணி மாதம் முழுவதும் மொய்விருந்து நடத்தப்படுகிறது. அதே சமயம் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த மொய் விருந்து தற்போது 4 ஆண்டுக்கு ஒரு முறையாக மாறிவிட்டது. அவரவர் தகுதிக்கேற்ப சதவீத கணக்கில் தான் மொய் திருப்பி செய்யப்படவேண்டும் என்பது மொய் விருந்தின் எழுதப்படாத விதி.

    இதுபற்றி கிராம மக்கள் கூறியதாவது:-

    வழக்கத்தை விட கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலின் பாதிப்பில் இருந்து விவசாயிகள் இன்னும் மீளவில்லை. இதனால் மொய் விருந்து வசூல் மந்த கதியில் உள்ளது. ரூ.ஆயிரம் புதிய மொய் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் பணம் பற்றாக்குறையால் ரூ.250 முதல் ரூ.500 வரை மட்டுமே மொய் செய்ய முடிகிறது.

    இருந்தாலும் விவசாயிகள் தங்கள் விவசாயத்தை காப்பாற்ற ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும், வாங்கிய கடன்களை திரும்ப செலுத்தவும், வியாபாரத்திற்காகவும் மொய் விருந்து நடத்த வெண்டிய நிலையில் இருப்பதால் மொய் விருந்துகள் நடத்தப்படுகின்றன. மொய் என்பது ஆண்டுக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மொத்த தொகையாக கிடைப்பதுதான்.

    அந்த தொகையை ஏதாவது ஒரு விதத்தில் முதலீடு செய்து வருமானம் பார்த்தால் வட்டியில்லா கடன் என்பதுபோல லாபம். ஊதாரித்தனமாக செலவு செய்தால் கந்து வட்டியை விட மோசம். மொய் தொகையால் வளர்ந்த குடும்பங்களும் உண்டு. அதனால் முகவரி இல்லாமல் போன குடும்பங்களும் உண்டு. பேராவூரணி பகுதியில் மொய் விருந்து பெயர் பெற்றதற்கு காரணம் தென்னை வருமானம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×