search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட நாகநாதன்.
    X
    கொலை செய்யப்பட்ட நாகநாதன்.

    சென்னை கார் டிரைவரை கொன்று சாலையோரம் உடலை வீசிய கும்பல்

    குற்றாலத்துக்கு சுற்றுலா அழைத்துச்சென்று சென்னை கார் டிரைவரை கொலை செய்து வீசிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அசோக் நகர் 30-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது காரை டிராவல்ஸ் நிறுவனம் மூலமாக எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த டிரைவர் நாகநாதன், கடந்த 5-ந்தேதி வாடகைக்கு ஓட்டிச்சென்றார்.

    குற்றாலம் மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்ப வேண்டும் என்று குரோம்பேட்டையில் இருந்து 4 பேர் காரை வாடகைக்கு கேட்டுள்ளனர். தனக்கு தெரிந்த தனியார் டிராவல்ஸ் மூலமாக தனது காரை சுந்தர் அனுப்பி வைத்தார்.

    குரோம்பேட்டையில் இருந்து கடந்த 5-ந்தேதி இரவு ஒரு பெண்ணும், 3 வாலிபர்களும் காரில் ஏறினார்கள். பின்னர் பல இடங்களை அவர்கள் சுற்றி பார்த்துள்ளனர்.

    8-ந்தேதி இரவு நெல்லையில் இருப்பதாக டிரைவர் நாகநாதன் கார் உரிமையாளர் சுந்தரிடம் பேசி உள்ளார். அப்போது காலை சென்னை வந்துவிடுவோம் என்று அவர் தெரிவித்தார். ஆனால், 9-ந்தேதி நாகநாதனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் திடீரென மாயமானார்.

    இதுபற்றி கார் உரிமையாளர் சுந்தர் அசோக் நகர் போலீசில் புகார் அளித்தார். உதவி கமி‌ஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மதுரை மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது. அது மாயமான டிரைவர் நாகநாதனின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அசோக் நகர் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்தது மாயமான டிரைவர் நாகநாதன் என்பது உறுதி செய்யப்பட்டது.

    டிரைவர் நாகநாதனை சுற்றுலா அழைத்துச் சென்று திட்டமிட்டு கார் கடத்தல் கும்பல் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த கும்பல் 5-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி இரவு வரையில் குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது காருக்கு அவர்களே டீசலும் போட்டுள்ளனர்.

    இதுபற்றி கார் உரிமையாளர் சுந்தரிடம் தெரிவித்த டிரைவர் நாகநாதன் காரில் வந்தவர்களால் இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை. திட்டமிட்டப்படி 9-ந்தேதி சென்னை வந்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இதுவே அவர் பேசிய கடைசி பேச்சாகும்.

    நெல்லையில் இருந்து 8-ந்தேதி இரவு டிரைவர் நாகநாதன் 4 பேரையும் ஏற்றிக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். அப்போது நாகநாதனை காரில் வைத்தே பெண் உள்பட 4 பேரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

    இதன் பின்னர் மதுரை மேலூர் அருகே வந்ததும் கொட்டாம்பட்டி பகுதியில் சாலை ஓரமாக இருந்த சிறிய உறை கிணற்றில் உடலை வீசியுள்ளனர்.

    சுமார் 10 அடி ஆழத்தில் டிரைவர் நாகநாதனின் உடல் கிடந்ததால் உடனடியாக யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    8-ந்தேதி இரவு கொலை செய்து வீசப்பட்ட அவரது உடல் நேற்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அழுகிய நிலையில் உடல் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த உடை மற்றும் கையில் கட்டி இருந்த கயிறு ஆகியவற்றை வைத்து உறவினர்கள் அடையாளம் காட்டி உள்ளனர்.

    நாகநாதனை கொன்று காரை கடத்திச்சென்ற கும்பல் காருடன் மாயமாகி உள்ளது. அவர்கள் யார் என்பது தெரியவில்லை. காரில் பயணம் செய்த கொலையாளிகளில் ஒருவர் டிரைவர் நாகநாதனிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அது தொலைந்து போன வேறு ஒருவரின் செல்போன் என்பது தெரிய வந்தது.

    அந்த செல்போன் எண்ணும் தற்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அசோக்நகர் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொட்டாம்பட்டி போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து சுற்றுலா அழைத்துச் சென்று கார் டிரைவரை கொன்று மதுரை அருகே வீசிய சம்பவம் வாடகை கார் டிரைவர்கள் மத்தியில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    கொலை செய்யப்பட்ட நாகநானின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் ஓடக்கரை கிராமம் ஆகும்.

    அவரது உடல் சம்பவ இடத்திலேயே பிரேத பரி சோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    Next Story
    ×