search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திவாகரன்
    X
    திவாகரன்

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தடையாக இருக்கிறார்- திவாகரன்

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டி.டி.வி. தினகரன் தடையாக உள்ளார் என்று அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
    மன்னார்குடி:

    அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு புதிய கல்விகொள்கையை வாபஸ் பெற வேண்டும். ஒரே ரேசன் திட்டம் தவறானது. இந்தி திணிப்பை மனதில் வைத்து தான் அமித்ஷா பேசியுள்ளார். அது சாத்தியமில்லாத ஒன்று. இந்தி திணிப்பை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.

    வெளிநாடு முதலீடுகளை ஈர்க்க போகிறோம் என்று கூறி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் ஜாலியாக டூர் சென்று வந்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் எந்த பயனும் ஏற்படாது. முதலில் முதல்-அமைச்சர் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க டி.டி.வி. தினகரன் தடையாக உள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று தினகரன் நினைக்கிறார். தினகரனுக்கு மக்கள் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை கடந்த தேர்தலில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அரசியல் ரீதியாக தினகரனை தனிமைப்படுத்தினால் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைய வாய்ப்புள்ளது.

    காவிரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் இருப்பது தான் காரணம். முதல்-அமைச்சருக்கு நீர் மேலாண்மை பற்றி தெரியாமல் இருக்கும். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருப்பது கண்டனத்துக்குரியது.

    இவற்றை சரிசெய்யாத முடியாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர்மேலாண்மைக்காக இஸ்ரேல் செல்வது எந்த விதத்திலும் பயன் இருக்காது. இனி வருங்காலங்களில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×