search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    கமுதியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. விடைத்தாள்கள் தாமதமாக அனுப்பப்பட்டதா? தாசில்தார் விளக்கம்

    கமுதியில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. விடைத்தாள்கள் தாமதமாக அனுப்பப்பட்டதாக எழுந்த புகாரை தாசில்தார் மறுத்துள்ளார்.

    கமுதி:

    தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுகள் நடைபெற்றது. 14 லட்சம் பேர் எழுதிய தேர்வு விடைத்தாள்கள் அன்று மாலையே சீல் வைக்கப்பட்டு தமிழ் நாடு தேர்வாணைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 9 மையங்களில் நடந்த தேர்வு விடைத்தாள்கள் 13 நாள் தாமதமாக அனுப்பி வைக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழுந்துள்ளது.

    இதனை கமுதி வட்டாட்சியர் மீனலோசினி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான வினாத்தாள்கள் மற்றும் மெட்டீரியல்கள் மாவட்ட கருவூலத்தில் இருந்து கமுதி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தது. “தாலுகா எக்ஸ்ட்ரா” என்ற பெயரில் ஒரு பார்சலும் வந்தது.

    தேர்வு நாளில் விடைத்தாள் பார்சல் சீல் உடைக்கப்பட்டு தேர்வு எழுதியவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.

    மாலையில் தேர்வு முடிந்ததும் அனைத்து விடைத்தாள்களும் பெறப்பட்டு பார்சலாக கட்டி சீல் வைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அவை முறைப்படி தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டு விட்டது. இதில் எந்த தாமதமும் இல்லை.

    தேர்வு முடிந்த 2 நாட்களுக்கு பிறகு எக்ஸ்டிரா என வந்த பார்சல் குறித்து கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் அதனை தங்களுக்கு அனுப்பச் சொன்னதன் பேரில் பார்சலை பிரிக்காமல் அப்படியே அனுப்பி விட்டோம்.

    அவர்கள் மாவட்டத்தின் மற்ற மையங்களில் இருந்து பெறப்பட்ட பார்சல்களையும் சேர்த்து ஆள்மூலம் தேர்வாணையத்துக்கு அனுப்பி உள்ளனர். இது நடைமுறைதான். இதில் எந்த குழப்பமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவை தொடர்பு கொண்ட போது தேர்வின் போது எக்ஸ்ட்ரா பேப்பர் (ஓ.எம்.ஆர்.) என்ற பெயரில் மையங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி கமுதி தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட பார்சல் 2 நாட்களுக்கு பிறகு திரும்ப பெறப்பட்டது.

    ஆனால் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு முடிந்ததும் மாலையிலேயே சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. அதில் எந்த தாமதமும் இல்லை.

    தேவையற்ற புகாரை கிளப்பியவர்கள் யார்? என்பது குறித்து கமுதி தாலுகா அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×