search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐம்பொன் சிலை கொள்ளை போன மகாலட்சுமி அம்மன் கோவில்.
    X
    ஐம்பொன் சிலை கொள்ளை போன மகாலட்சுமி அம்மன் கோவில்.

    நெகமம் அருகே மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளை

    கோவை மாவட்டம் நெகமம் அருகே மகாலட்சுமி அம்மன் கோவில் ஜன்னலை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
    நெகமம்:

    கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரையில் இருந்து சிறுகளந்தை செல்லும் வழியில் தனியாருக்கு சொந்தமான மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நேற்று இரவு 8 மணிக்கு பூஜை முடிந்து பூசாரி சுப்பிரமணியம் கோவிலை பூட்டி சென்றார். நள்ளிரவு அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் கோவிலில் இருந்த இரண்டே கால் மற்றும் ஒன்றே கால் அடி உயர 2 பெருமாள் ஐம்பொன் சிலை, இரண்டே கால் மற்றும் ஒன்றே கால் அடி உயரமுள்ள 2 மகாலட்சுமி ஐம்பொன் சிலை, அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி பொட்டு, ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கிரீடம், பாவை விளக்கு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அதிகாலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி சுப்பிரமணியம் கோவிலின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி ஐம்பொன் சிலைகள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்து தங்க தாலி பொட்டு உள்ளிட்டவைகள் கொள்ளை போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    கொள்ளை போன ஐம்பொன் சிலைகளின் மதிப்பு ரூ. 3 லட்சம் ஆகும்.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நெகமம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மேலும் கோவையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது கோவிலில் இருந்து சற்று தூரம் ஓடி நின்றது. ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலின் ஜன்னலை உடைத்து ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நெகமம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×