search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சி.
    X
    வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ள காட்சி.

    சேலம் அருகே ஊருக்குள் வெள்ளம் புகுந்தது: விடிய-விடிய தூங்காமல் தவித்த பொதுமக்கள்

    சேலம் அருகே வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததாலும், ரோட்டில் முட்டளவு தண்ணீர் தேங்கியதாலும் அப்பகுதி பொதுமக்கள் விடிய- விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலை வெள்ளம் வடிய தொடங்கி உள்ளதால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.
    காகாபாளையம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று மாலை ஆட்டையாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இளம்பிள்ளை பகுதியில் பலத்த மழை கொட்டியது.

    இந்த மழையால் சந்தைப்பேட்டை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்ததால் கழிவுநீருடன் மழை நீரும் தேங்கியது. இரவு 7 மணி அளவில் இந்த ஏரியின் மதகில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் அதிகளவில் வெளியேறியது. இந்த தண்ணீர் பெருமாகவுண்டம்பட்டி ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள கரடிகுண்டு தெரு, காளியம்மன் கோவில் தெரு, வீரபத்திரர் தெரு உள்பட பல பகுதிகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் அங்கு வசித்து வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில வீடுகள் சேதம் அடைந்தன. வீடுகளில் இருந்த பொருட்களும் தண்ணீரில் நனைந்து சேதமானது. வீடுகளில் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள தறிப்பட்டறைகளிலும் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து இரவும் மழை பெய்தால் பெரு வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடும் என தகவல் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்கள் பீதி அடைந்தனர்.

    அந்த பகுதியில் மின்சாரமும் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வந்ததால் பாம்புகளும், வி‌ஷ பூச்சிகளும் வீடுகளுக்கு அருகில் தண்ணீரில் மிதந்து வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி செய்வதறியாது திகைத்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சேலம் தெற்கு தாசில்தார் ஆர்த்தி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். சேலம் கோட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இரவு தங்க வைக்கப்பட்டனர். சிலர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

    வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததாலும், ரோட்டில் முட்டளவு தண்ணீர் தேங்கியதாலும் அப்பகுதி பொதுமக்கள் விடிய- விடிய தூங்காமல் தவித்தனர். இன்று காலை வெள்ளம் வடிய தொடங்கி உள்ளதால் அவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினார்கள்.

    இளம்பிள்ளை ஏரியில் இருந்து நடுவனேரிக்கு செல்லும் ஓடை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளதால் மழை நீர் தாழ்வான பகுதியில் செல்கின்றன. சிலர் அந்த பகுதியில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் துருபிடித்த ஏரி மதகுகளை சரிசெய்யாமல் மண் கொட்டி அடைத்து உள்ளனர். இதனால் மதகு உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. தொடர்ந்து மழை அதிகரிக்கும் பட்சத்தில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்பு ஊருக்குள் தண்ணீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    Next Story
    ×