search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
    X
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

    சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் லட்டு வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய நடைமுறை வருகிற தீபாவளி முதல் அமலுக்கு வருகிறது.
    மதுரை :

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை போன்று, அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதமும் புகழ் பெற்றது.

    திருப்பதி கோவிலை போன்று, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல் கிறார்கள். 12 மாதங்களும் திருவிழா நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிவபெருமானே நேரடியாக பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்தியதாக புராணம் கூறுகிறது.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கோவிலை, பக்தர்கள் முறையாக சென்று வழிபடும் வகையில் வடிவமைத்தவர் திருமலைநாயக்கர். அவரது காலத்தில்தான் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை அந்த திருவிழாக்கள் முறையாக நடந்து வருகின்றன. எனவே முக்கிய விழாக்களின் போது மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம்.

    இந்தியாவில் உள்ள தூய்மையான புனித தலங்களில் 2-வது இடம் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சமீபத்தில் அதற்கான விருது வழங்கப்பட்டது.

    லட்டு

    இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும், அதிகாலை நடை திறந்ததில் இருந்து, இரவு நடை சாத்தப்படும் வரை, தீபாவளி திருநாளான வருகிற 27.10.2019-ந் தேதி முதல் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.

    இதுபற்றி தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கோவில்களிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குத்தான் தூய்மை விருது கிடைத்து உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறோம். இந்தநிலையில் வருகிற தீபாவளி முதல் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வினியோகம் செய்ய உள்ளோம்.

    இதற்காக ரூ.5 லட்சம் செலவில் லட்டு தயாரிக்கும் எந்திரத்தை வாங்கி இருக்கிறோம். இதன் மூலம் ஒரு மணி நேரத்துக்கு 500 லட்டுகள் தயாரிக்கப்படும். இதற்காக அரசிடம் அனுமதி பெற்று விட்டோம். தமிழகத்திலேயே அறநிலையத்துறை கோவில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்தான் முதன்முதலாக லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×