search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 59 ஆயிரம் கனஅடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நேற்று 68 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 59 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது.

    இதனால் கர்நடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அந்த அணைகளில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 7-ந்தேதி 75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால் அன்று பிற்பகல் மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக 2 அணைகளில் இருந்தும் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை முதல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடியும், கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடியும் என மொத்தம் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தமிழக காவிரியில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 70 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று மாலை தண்ணீர் வரத்து 60 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கலில் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்த படி வெள்ளம் செல்கிறது. பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 68 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 59 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரியில் 68 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    காவிரி ஆற்றில் 50 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 900 கன அடியும் என மொத்தம் 50 ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு மேலும் குறைய வாய்ப்புள்ளது. நேற்று 120.74 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 120.70 அடியாக இருந்தது.
    Next Story
    ×