search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓணம் பண்டிகை
    X
    ஓணம் பண்டிகை

    நாளை ஓணம் பண்டிகை- தலைவர்கள் வாழ்த்து

    ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    நாளை (புதன்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    மக்களுக்காக, மக்களுக்காகவே நல்லாட்சி நடத்திய மகாபலி மன்னனை வஞ்சகம், சூழ்ச்சி காரணமாக அழித்து விட்டாலும், கேரள மாநில மக்கள் நன்றியுணர்ச்சியோடு மாமன்னன் நினைவை போற்றும் வகையில் புகழ்பாடி கொண்டாடும் நாளாக ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் எவ்வித பேதமின்றி மலையாள மொழி பேசுகிற கேரள மாநில மக்கள் தமிழக மக்களோடு சகோதர உணர்வுடன் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்தும், தொழில் புரிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். தமிழகத்தில் வாழ்கிற கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    புவிவெப்பமயமாதல் கேரளாவை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் இயற்கையை நேசிக்காமல், அதை நாம் சீரழித்தது தான். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், இயற்கைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கக் கூடாது. மாறாக, இயற்கையை மீட்டு உலகைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும். ஓணம் திருநாள் மக்களுக்கு மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.:-

    ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாளும் மக்கள் மகிழ்ச்சியாக வாழவும், அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று கூறி ஓணம் கொண்டாடும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    கேரள மக்கள் சாதி, மத, பேதம் கடந்து பசுமையும், ஈரமும் நிறைந்திருக்கும் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க திருவிழாவான ஓணம் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது.

    மகாபலி மன்னரைப் போல நல்ல எண்ணங்களுடன், தொண்டுள்ளத்துடன், அன்புடன், அரவணைத்து, உதவிகள் செய்து, உபசரித்து வாழும் மலையாள மக்களுக்கு த.மா.கா சார்பில் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கிறேன்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார்:-

    சிறப்புமிக்க ஓணம் திருநாளில், கேரள மக்கள், உலகெங்கும் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் அன்பும், மகிழ்ச்சியும் கலந்த வாழ்த்துக்கள்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

    Next Story
    ×