search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    வில்லிவாக்கத்தில் கார் டிரைவர் வெட்டி படுகொலை

    வில்லிவாக்கத்தில் கார் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை வில்லிவாக்கம் பலராமபுரம் 2-வது தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கரன் (வயது40). கார் டிரைவரான இவர் கால் டாக்சி ஓட்டி வந்தார்.

    நேற்று இரவு 12 மணி அளவில் பாஸ்கரன் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். தனது வீட்டு அருகே காரை நிறுத்திய அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கும்பல் பாஸ்கரனை திடீரென வழி மறித்தது. முகத்தை துணியால் மூடி இருந்த அவர்களது கைகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் அங்கிருந்து ஓட முயன்றார். அதற்குள் அந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த ஸ்பிரேயை அவரது முகத்தில் அடித்தனர். இதில் கண் எரிச்சலால் பாஸ்கரன் நிலைகுலைந்தார். அப்போது 6 பேரும் சேர்ந்து சரமாரியாக வெட்டினர்.

    இதில் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்ட பாஸ்கரன், உயிர் பிழைப்பதற்காக வெட்டுக் காயங்களுடன் ஓட்டம் பிடித்தார். இருப்பினும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட 6 பேரும், பாஸ்கரனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்றனர்.

    பின்னர் கொலையாளிகள், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வில்லிவாக்கம் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உதவி கமி‌ஷனர் அகஸ்டின், இன்ஸ்பெக்டர் ரத்தீஸ் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க உடனடியாக தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    வில்லிவாக்கத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ரெயில்வே தொழிற் சங்க தலைவரான ஜே.கே.புதியவன் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாஸ்கரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிக் கொண்டு புதியவன் ஏமாற்றியதால் கொலை செய்யப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் 6 மாதத்துக்கு முன்புதான் பாஸ்கரன் சிறையில் இருந்து வெளியில் வந்தார். இந்த நிலையில்தான் எதிரிகள் அவரை தீர்த்துக் கட்டியுள்ளனர்.

    ஜே.கே.புதியவன் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காகவே அவரது உறவினர்கள் திட்டம் போட்டு பாஸ்கரனை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கொலையாளிகள் யார்? என்பது உடனடியாக தெரிய வில்லை. அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலை நடந்த இடத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் போட்டு பார்த்து ஆய்வு செய்தனர்.

    கொலையாளிகள் ஆயுதங்களுடன் செல்லும் காட்சி அதில் பதிவாகி உள்ளது. இதனை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொலை சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடை பெறாமல் தடுப்பதற்காக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×