search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை விமான நிலையம்
    X
    கோவை விமான நிலையம்

    கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

    கோவை விமான நிலையத்தில் இன்று காலை திடீரென வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு சோதனை சிறப்பு பிரிவு வீரர்கள் இந்த சோதனை நடத்தினார்கள். இதனால் பரபரப்பு உருவானது.
    கோவை:

    கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கிறது.

    இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் 6 பேர் கோவையில் ஊடுருவி இருப்பதாக கடந்த வாரம் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனை தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கமாண்டோ படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர்.

    கோவை விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கோவை சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து பாதுகாப்பு தளர்த்தப்பட்டது. ஆனாலும் கோவை விமான நிலையத்தில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனை செய்யப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் வரும் பயணிகள், பார்வையாளர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை கோவை விமான நிலையத்தில் திடீரென வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு சோதனை சிறப்பு பிரிவு வீரர்கள் இந்த சோதனை நடத்தினார்கள். இதனால் பரபரப்பு உருவானது.

    இது குறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்ட போது, இது வழக்கமாக நடைபெறும் சோதனை தான். பயணிகள் பீதி அடைய தேவையில்லை என்றனர்.
    Next Story
    ×