search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வாங்க முடிவு

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு புதிய யானை வாங்க முடிவு செய்துள்ள அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் பெங்களூரு சென்று முகாமிட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இருந்த பெண் யானையின் பெயர் ருக்கு.

    கடந்த 1988-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி பிறந்தது. 1995-ம் ஆண்டு யானை ருக்குக்கு 7 வயதான போது, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை ருக்குவை வழங்கினார்.

    23 ஆண்டுகளாக தினசரி அதிகாலையில் நடக்கும் கோ பூஜை, கஜ பூஜையில் யானை ருக்கு பங்கேற்று பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியது.

    கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விழாக்காலங்களில் அருணாசலேஸ்வரர் வாகன உற்சவங்களுக்கு முன்பு யானை ருக்கு, மாட வீதிகளில் வலம் வருவதும் வழக்கம். மேலும், மகா தீப விழாவில், கொப்பரையை யானை ருக்கு ஆசீர்வதித்த பிறகே, 2,668 அடி மலை உச்சிக்கு தூக்கி சென்று மகா தீபம் ஏற்றுவர்.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்கம் போல் பக்தர்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் அருகே உள்ள 5-ம் பிரகாரத்தில் யானை ருக்கு ஓய்வெடுக்க சென்றது.

    அப்போது, யானை ருக்கு அருகில் 4 நாய்கள் சண்டை போட்டு குரைத்து கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. அதில் ஒரு நாய், யானையின் காலை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன யானை ருக்கு வேகமாக ஓடி அங்கிருந்த இரும்பு தடுப்புச் சுவரில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில், இடது கண் மற்றும் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு யானை ருக்கு சுருண்டு விழுந்துள்ளது. வழக்கமாக பரிசோதனை செய்யும் டாக்டர் வெங்கடேஸ்வரன் வரவழைக்கப்பட்டு யானை ருக்குவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் யானை பரிதாபமாக இறந்தது. கோவில் அருகே யானை அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கோவிலுக்கு புதிய யானை வழங்க தொழிலதிபர்கள் பலர் முன்வந்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் யானை வாங்குவது தொடர்பாக முடிவு செய்யாமல் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது கோவிலுக்கு புதிய யானை வாங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அதிகாரிகள் சிவாச்சாரியார்கள் கொண்ட குழுவினர் பெங்களூரு சென்று முகாமிட்டுள்ளனர். அங்கு சில யானை குட்டிகளை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×