search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னையில் மழைநீர் சேகரிக்காத 9 ஆயிரம் வீடுகளுக்கு நோட்டீசு - மாநகராட்சி நடவடிக்கை

    சென்னையில் மழைநீர் சேகரிக்காத 9 ஆயிரம் வீடுகளுக்கு மாநகராட்சி நோட்டீசு அனுப்பி இந்த மாத இறுதிக்குள் மழைநீர் சேகரிப்பு மையத்தை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
    சென்னை:

    மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதை உணரும் காலக்கட்டத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.

    பருவ மழை கடந்த 2 வருடமாக பெய்யாததால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தன. வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றி குடிநீருக்கு அவதிப்படும் நிலை ஏற்பட்டது.

    வீடுகளில் உள்ள கிணறு கூட தண்ணீர் இல்லாமல் வற்றி இந்த ஆண்டு கடும் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடிநீரை ரெயில் மூலமும், லாரிகள் மூலமும் அரசு மக்களுக்கு வழங்கி வருகிறது.

    இயற்கை பொய்த்தாலும் கூட மக்கள் நம் கடமையை முறையாக செய்யவில்லை என்பதை குடிநீர் பிரச்சினை வெளிச்சம் போட்டு காட்டியது. மழைநீரை இனி சேமிக்க வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இக்காலக் கட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

    வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி பெறுபவர்கள் மழைநீர் சேகரிப்பு மையத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

    ஏற்கனவே உள்ள வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது. மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் உத்தரவின் பேரில் இந்த பணியை அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வுசெய்து வருகிறார்கள்.

    பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்கள், தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு மையம் செயல்படுகிறதா? ஒவ்வொரு மண்டலமாக தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    மழைநீரை சேமிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்காத வீடுகள், கட்டிட உரிமையாளர்கள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் வரை 2 லட்சத்து 72 ஆயிரம் வீடுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் 1 லட்சத்து 62 ஆயிரம் வீடுகளில் முறையான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 38,507 வீடுகளில் உள்ள சேகரிப்பு மையங்களை சிறிது பழுது பார்த்து சரிசெய்தால் பயன்படுத்தலாம்.

    ஆனால் 69,490 இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பே உருவாக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அந்த கட்டிட, வீட்டு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சென்னையில் இதுவரையில் நடத்திய ஆய்வில் 9 ஆயிரம் வீடுகளில் மட்டும் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்தந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பு மையத்தை உடனே அமைக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதனை அமைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

    அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க இருப்பதால் அதற்குள்ளாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு மையத்தை உருவாக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

    ஒவ்வொரு வார்டிலும் 1000-ம் கட்டமைப்பு உருவாக்க வேண்டும் எனவும், சிறிய தெருக்களில் உள்ள வீடுகளிலும் இதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×