search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜக்கி வாசுதேவ்
    X
    ஜக்கி வாசுதேவ்

    காவிரி வடிநிலப்பகுதிகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்படும் - ஜக்கி வாசுதேவ்

    காவிரி வடிநிலப்பகுதிகளில் அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
    சென்னை:

    ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அளித்த சிறப்பு பேட்டியில் நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- 2 வருடங்களுக்கு முன்பு நதிகளை மீட்பதற்காக ‘மிஸ்டு கால்’ கொடுக்க சொன்னீர்கள். உங்களை நம்பி கோடிக்கணக்கானோர் மிஸ்டு கால் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ‘மிஸ்டு கால்’ என்ன ஆனது?.

    பதில்:- நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு 16.2 கோடி மக்கள் தங்களின் ஆதரவை ‘மிஸ்டு கால்’ மூலம் தந்தனர். வேறெந்த இயக்கத்திற்கும் மக்கள் இந்த அளவில் தங்களின் ஆதரவை வழங்கியதில்லை. நதிகள் மீட்பு என்பது நீண்ட கால திட்டம். இதுபோன்ற நீண்டகால திட்டங்களை அரசு கையில் எடுக்க மக்களின் ஆதரவு இருக்கும் என்பதை காட்டவே ‘மிஸ்டு கால்கள்’ கொடுக்க சொல்லி கேட்டோம். இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை அளவில் மாற்றம் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி. இத்தனை கோடி மக்களின் ஆதரவோடு நாம் பிரதமரிடம் இந்திய நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான கொள்கை வரைவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்தோம்.

    பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் அந்த வரைவு திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய நிதி ஆயோக்கின் கீழ் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழு அறிவியல் பூர்வ ஆய்வுகள் செய்து நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான பரிந்துரைகளை எப்படி களத்தில் செயல்படுத்துவது என விளக்கும் செயல்திட்டத்தை தயார் செய்தது.

    அந்த திட்டத்தை நதிகளுக்கான தேசிய அளவிலான கொள்கையாக அங்கீகரித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகாரபூர்வமாக நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்தது. கொள்கை அளவில் நாம் விரும்பிய மாற்றத்தை செய்துவிட்டோம். அந்த வகையில் இத்தனை கோடி மக்கள் கொடுத்த ‘மிஸ்டு கால்’ 100 சதவீதம் வெற்றிதான்.

    கேள்வி:- அரசாங்கத்தில் இதுபோன்ற ஏராளமான பரிந்துரைகள் செய்யப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் உள்ள பெரிய சிக்கலே அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தான் உள்ளது. அந்த வகையில் உங்கள் பரிந்துரை வெற்றிகரமாக அமல்படுத்தப்படும் என்று எப்படி நம்புகிறீர்கள்?.

    பதில்:- நதிகளை பயன்படுத்தும் வகையில் அதற்கென்று பங்குதாரர்கள் உண்டு. இதில் முதல் பங்குதாரர் ஆறுகள். பின் அதில் வாழும் உயிர்கள், உழவர்கள். அதன்மூலம் வாழும் சமூகம், உள்ளூர் மற்றும் மத்திய நிர்வாகங்கள். அனைத்து பங்குதாரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஒரு திட்ட வரைவினை, அனைவருக்கும் பயன்படும் வகையில் சிறந்த பொருளாதார திட்டமாகவும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உதவும் வகையிலும் தயாரித்துள்ளோம். இத்திட்டம் அனைவருக்கும் பலனளிக்கும் என்பதால் நடைமுறைப்படுத்துவதில் பெரிய சிக்கல் இருக்காது.

    நதிகள் மீட்பு இயக்கத்துடன் மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சத்தீஸ்கர், அசாம் ஆகிய 6 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இந்த 6 மாநிலங்களிலும் அந்தந்த அரசுகளுடன் இணைந்து களப்பணியாற்ற உள்ளோம். இதில் மகாராஷ்டிரத்தில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    நதிகள் மீட்பு இயக்கத்தின் முதல் களப்பணியாக தேசிய அளவில் விவசாயிகள் தற்கொலை அதிகம் நிகழும் விதர்பா பகுதியில் உள்ள வஹாரி நதியை புத்துயிரூட்டுவதற்கு அம்மாநில அரசு ரூ.415 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் பணிகளை தீவிரப்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

    கேள்வி:- அந்த வகையில் தமிழகத்தில் என்ன பணிகள் செய்ய இருக்கிறீர்கள்?.

    பதில்:- நதிகள் மீட்பு இயக்கத்தின் 2-வது களப்பணியாக காவிரி நதியை மீட்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களின் முக்கிய நீராதாரமாக இருக்கும் காவிரி கடந்த 70 ஆண்டுகளில் 40 சதவீதம் வற்றிவிட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. தலைக்காவிரியில் தொடங்கி திருவாரூர் வரையிலான காவிரி வடிநிலப் பகுதியில் இருந்த 87 சதவீதம் மரப்போர்வை நீக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மட்டும் 42 சதவீத விவசாய நிலங்கள் மலட்டுத் தன்மையை அடைந்துள்ளன. இதை இப்படியே விட்டால் இன்னும் 15-20 ஆண்டுகள் அந்த நிலங்கள் எல்லாம் பாலைவனமாக மாறிவிடும்.

    நமக்கு உணவு அளிக்கும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக உள்ளது. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வளமான மண்ணும் போதிய தண்ணீரும் இல்லாதது தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு அடிப்படை காரணம்.

    மரக்கன்றுகள்

    இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் சிறந்த தீர்வு மரம் வளர்ப்பது தான். அதற்காக, 83 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காவிரி வடிநிலப் பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் வேளாண் காடு வளர்ப்பு மூலம் 242 கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். முதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரக்கன்றுகள் நட முயற்சிகள் எடுத்து வருகிறோம். இந்த மரக்கன்றுகளை எல்லாம் நாமே நடப்போவது. விவசாயிகள் தான் வளர்க்கப்போகிறார்கள்.

    கேள்வி:- வேளாண் காடு முறைக்கு மாறுவதால் விவசாயிகள் என்ன பயன் கிடைக்கும்? ஏற்கனவே அவர்கள் மேற்கொண்டு வரும் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடாதா?.

    பதில்:- காவிரி வடிநிலப் பகுதி முழுவதும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் 3-ல் 1 பங்கு மரங்கள் இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். அதனால், சாமானிய பயிர் உற்பத்தி எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக, வேளாண் காடு முறைக்கு மாறும் விவசாயிகளின் பொருளாதாரம் 5 முதல் 7 ஆண்டுகள் 3 முதல் 4 மடங்கு உயர்வதற்கு வாய்ப்புள்ளது. வேளாண் காடு முறைக்கு மாறும்போது ஏற்படும் சில பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட முதல் 4 ஆண்டுகளுக்கு அந்த விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை வைத்துள்ளோம். அந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும். விவசாயியின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் ஒரு சேர வளர்ச்சி அடையும். இவற்றையெல்லாம் தாண்டி, எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருக்கும் நம் மண் வளம் பெரும். காவிரி புத்துயிர் பெரும்.

    நம் மண்ணையும், நதியையும் காக்கும் இந்த விஷயத்தில் சாதி, மதம், கட்சி பாகுபாடு கடந்து அனைவரும் ஒன்றாக கரம் கோர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×