search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்கவில்லை

    தொடர் நஷ்டம் மற்றும் வருவாய் குறைந்ததால் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் கிடைக்கவில்லை. மேலும் 10 நாட்கள் தாமதமாகும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய அரசின் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர் நஷ்டத்தால் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாமலும் அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளம் தனியாரைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாலும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    நாடு முழுவதும் அதிகாரிகள், ஊழியர்கள் என ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 கோடி ரூபாய் முதல் ரூ.850 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.

    வருமானத்தில் 65 சதவீதம் சம்பளமாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க தேவையான தகவல் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாததால் வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் வருவாய் குறைந்து கொண்டே செல்கிறது.

    ஒவ்வொரு மாதமும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு மாதத்தின் இறுதி வேலை நாட்களுக்கு முதல் சம்பளம் வழங்கப்படும். அதன்படி நேற்று 30-ந்தேதி ஆகஸ்டு மாதத்துக்கான சம்பளம் போடப்பட்டிருக்க வேண்டும். சம்பளம் வழங்குவதற்கு தேவையான வருவாய் இல்லாததால் தாமதம் ஆகியுள்ளது.

    தமிழ்நாடு வட்டாரத்தில் 14 ஆயிரம் பேரும், சென்னை டெலிபோன் நிறுவனத்தில் 6 ஆயிரம் பேரும் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.

    இந்த வருடத்தில் 3-வது முறையாக சம்பளம் தாமதமாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே பிப்ரவரி, ஜூன் ஆகிய மாதங்களில் சம்பளம் தாமதமானது. அதைத் தொடர்ந்து ஆகஸ்டு மாத சம்பளமும் இப்போது கிடைக்கவில்லை.

    மேலும் இந்த மாதத்துக்கான சம்பளம் கிடைப்பதற்கு இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. சம்பளம் வழங்க தேவையான தொகை கலெக்‌ஷன் ஆன பிறகுதான் ஊழியர்களுக்கு போட முடியும். அதனால் நிலுவையில் உள்ள பாக்கிகளை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பி.எஸ்.என்.எல்.லில் வசூல் பிரிவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு பில் தொகை உடனே வந்துவிடுகிறது. பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அரசின் நிறுவனங்களிடம் இருந்தும் லட்சக்கணக்கில் பணம் பாக்கி உள்ளது. மேலும் வாடிக்கையாளர்களும் படிப்படியாக குறைந்து வருவதால் வருவாய் குறைகிறது. அதனால் பில் பாக்கி தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வாடிக்கையாளர்களிடம் இருந்து பாக்கியை வசூலித்து தான் சம்பளம் பெற வேண்டிய நிலை உள்ளது. இது தவிர பி.எஸ்.என்.எல். கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வங்கியிடம் கடன் பெறும் முயற்சியும் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆகஸ்டு மாதம் சம்பளம் செப்டம்பர் 10-ந்தேதிதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×