search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதார் அட்டை
    X
    ஆதார் அட்டை

    தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கோயம்பேட்டில் ஆதார் சேவை மையம்

    தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னை கோயம்பேட்டில் மத்திய அரசின் ஆதார் சேவை மையம் அமைக்கப்படுகிறது.
    சென்னை:

    அனைவருக்கும் ஆதார் அட்டை அத்தியாவசிய அடையாளமாக உள்ளது.

    ஆதார் அட்டையில் சிறிய எழுத்துப்பிழை இருந்தாலும் அதை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. அரசு, வங்கி சேவை தொடர்பாக ஆதார் அட்டையை தாக்கல் செய்யும்போது அதில் உள்ள அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும்.

    முகவரி மாற்றம் உள்ளிட்ட புதிய தகவல்களை ஆதாரில் பதிவு செய்வதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் ஆதார் சேவா கேந்திரா என்ற பெயரில் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆதார் அட்டைகளுக்கு தேவையான தகவல்களை தவறு இல்லாமல் முறைப்படி பதிவு செய்யலாம்.

    தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் மத்திய அரசின் ஆதார் சேவை மையம் அமைக்கப்படுகிறது. கோயம்பேடு ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள டென்ஸ்கொயர் மாலில் இது செயல்பட உள்ளது. இங்கு ஆதார் அட்டை தொடர்பான அனைத்து சேவைகளையும் பெறலாம்.

    தினமும் ஆயிரம் பேர் ஆதார் தொடர்பான தங்களது தகவல்களையும், திருத்தங்களையும் பதிவு செய்யலாம். காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த ஆதார் சேவை மையம் செயல்படும். செவ்வாய்க்கிழமை விடுமுறை.

    ஆதார் தொடர்பான திருத்தங்கள் செய்வது, புதிய தகவல்களை பதிவு செய்வதற்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். புதிதாக ஆதார் பெறுபவர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

    இந்த ஆதார் சேவை மையம் மூலம் திருத்தம், புதிய பதிவுகளை செய்ய விரும்புவோர்.

    http://appointments.uidai. gov.in/bookappointment.aspx  என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு தேவையான சான்றிதழ்களையும் கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட தினத்தில் சென்று டோக்கன் பெற வேண்டும். சான்றிதழ்கள் முறைப்படி சரிபார்க்கப்பட்டு ஆதார் அட்டையில் தகவல் பதிவேற்றம் செய்யப்படும்.

    சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ரூ.50 கட்டணம் செலுத்தி தேவையான திருத்தம், பதிவுகளை செய்துகொள்ளலாம். இந்த சேவை மையத்தில் 16 ஊழியர்கள் ஆதார் தகவல்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுவார்கள. மத்திய அரசு நாடு முழுவதும் 53 நகரங்களில் 114 ஆதார் சேவை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×