search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜன்
    X
    தமிழிசை சவுந்தரராஜன்

    கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா?- மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி

    அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? என்று மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.
    சென்னை:

    சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் பியூஸ் மானுஷ் நேற்று மாலை சேலம் மரவனேரியில் உள்ள மாநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்துக்கு விவாதம் செய்வதற்காக சென்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்டார்.

    இச்சம்பவத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அவர் டுவிட்டரில் கூறும்போது, “பா.ஜனதா அரசின் அவலங்களை ஆதாரத்துடன் முன் வைத்து விவாதித்த சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் பா.ஜனதா அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்றார்.

    இதற்கு பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்புமீறி கலாட்டா காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதுதான் சமூக செயல்பாடா?

    சமூக ஆர்வலர் போர்வையில் வீண் விளம்பரம் தேட வரும் அர்பன் நக்சலைட்டுகளை அடையாளம் காட்டுவோம். இதையே அறிவாலயம் அனுமதிக்குமா?

    அன்று யாரோ எங்கேயோ பேசியதற்காக தமிழக பா.ஜனதா தலைமை அலுவலகத்தை தேடி வந்து வாசலில் இருந்த பெண் தொண்டர்களையும், என்னையும் மற்றும் காவலர்களையும் காயப்படுத்தி தாக்கியது தி.மு.க. என்பது கடந்த கால வரலாறு.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×