search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த டாக்டர் ஆனந்த்
    X
    தற்கொலை செய்த டாக்டர் ஆனந்த்

    நாமக்கல் அருகே துப்பாக்கியால் சுட்டு திமுக நிர்வாகி தற்கொலை ஏன்?- போலீசார் விசாரணை

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே துப்பாக்கியால் சுட்டு தி.மு.க. நிர்வாகி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்தவர் டாக்டர் ஆனந்த் (வயது 50). இவர் நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது மனைவி தமிழ்செல்வி (45). இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் அபர்ணா (17). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    டாக்டர் ஆனந்த் பரமத்திவேலூர் பேட்டை பகுதியில் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை நடத்தி வந்தார்.

    இதன் மேல்மாடியில் உள்ள வீட்டில் டாக்டர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை இவர் வழக்கம்போல் ஆஸ்பத்திரியில் நோயாளிகளை பரிசோதனை செய்தார்.

    பிற்பகல் ஆனந்த் தனது காரில் செங்கப்பள்ளியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவர் கோவைக்கு சென்றிருந்த மனைவி தமிழ்செல்வியை செல்போனில் தொடர்புகொண்டு, நான் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறேன், என கூறினார்.

    இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி ஊரில் வசித்து வரும் உறவினரான செல்வம் என்பவரை தொடர்பு கொண்டு உடனே தோட்டத்திற்கு செல்லுமாறு கூறினார். இதையடுத்து செல்வம் தோட்டத்திற்கு சென்றார்.

    அங்கு டாக்டர் ஆனந்த் கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அவரை வீட்டிற்கு வருமாறு செல்வம் அழைத்தார். அதற்கு அவர் காரை திருப்பு வீட்டிற்கு செல்லலாம் என கூறினார். உடனே செல்வம் காரை திருப்பினார்.

    அந்த சமயம் டாக்டர் ஆனந்த் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை தாடையில் வைத்து சுட்டுக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, பரமத்திவேலூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    டாக்டர் ஆனந்த் தற்கொலைக்கு பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனந்த் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    டாக்டர் ஆனந்த் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இவருக்கு கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் உள்ளன. ஆஸ்பத்திரியை தவிர பெட்ரோல் பங்க், அரிசி மண்டி போன்றவை நடத்தி வந்தார். விவசாய நிலங்களும் ஏராளமாக உள்ளன.

    இவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை அழைத்து மாத சம்பளம் மற்றும் ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுத்துள்ளார். மேலும் 3 நாட்கள் விடுமுறை என்றும் கூறி உள்ளார். அப்போது நர்சுகள், ஏன் முன்கூட்டியே சம்பளம் வழங்குகிறீர்கள் என கேட்டுள்ளனர்.

    அதற்கு அவர் சில நாட்கள் நான் வெளியூர் செல்கிறேன். திரும்பி வர தாமதமாகும். அதனால் முன்னதாக சம்பளத்தை வழங்குவதாக கூறினார். இதனால் அவர் ஏற்கனவே தற்கொலை செய்ய முடிவெடுத்து உள்ளது தெரியவந்தது.

    டாக்டர் ஆனந்துக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதுதொடர்பாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இவர்களுக்குள் சண்டை வரும்போதெல்லாம் 2 பேரும் 4, 5 நாட்கள் பேசுவது கிடையாது.

    பின்னர் மனைவி தமிழ்செல்வி தானாக சென்று கணவரிடம் பேசி சமாதானம் செய்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் டாக்டர்கள் 20பேருடன் சேர்ந்து பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை என்ற கிராமத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு ஆனந்த் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

    மேலும் அங்கிருந்தபடி மனைவிக்கு போன் செய்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார்.

    குடும்ப தகராறு காரணமாக ஆனந்த் தற்கொலை செய்தாரா? அல்லது நிதி நெருக்கடியின் காரணமாக இந்த முடிவை தேடிக் கொண்டாரா? என்பது தெரியவில்லை.

    கணவர் இறந்தது பற்றி அறிந்ததும் மனைவி சொந்த ஊருக்கு திரும்பிவந்து கணவரின் உடலைப்பார்த்து கதறி அழுதார். அவரிடம் போலீசார் கணவருக்கு வேறு யாருடன் விரோதம் இருக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஆனந்த் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×