search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் லெப்பைக்குடிகாட்டில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் தமுமுக நிர்வாகி முகமது ஷெரீப் பேசிய காட்சி.
    X
    பெரம்பலூர் லெப்பைக்குடிகாட்டில் நடந்த தெருமுனை பிரசார கூட்டத்தில் தமுமுக நிர்வாகி முகமது ஷெரீப் பேசிய காட்சி.

    மோடி தலையை வெட்டுவோம்- கொலை மிரட்டல் விடுத்த த.மு.மு.க. நிர்வாகி கைது

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பஸ் நிலையம் அருகே த.மு.மு.க. சார்பில் கடந்த 23-ந்தேதி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

    மத்திய பா.ஜ.க. அரசு மக்களை பழிவாங்கும் நோக்கோடு இயற்றியுள்ள கருப்பு சட்டங்களை ரத்து செய்யவேண்டும், மத்திய அரசு நிறைவேற்றி உள்ள முத்தலாக் தடை சட்டம், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு நீக்கம், கும்பல் படுகொலை உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட த.மு.மு.க. அமைப்பின் தலைமைக்கழக பேச்சாளர் எம். முகமது ஷெரீப் பேசிய பேச்சு கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. பெரும் சர்ச்சையை கிளப்பிய அந்த வீடியோ பதிவில் முகமது ஷெரீப் பேசியிருந்ததாவது:-

    எங்களது கொள்கை எதிரி பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தான். இவர்களால் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நாட்டின் பிற சமூகத்தவர்களும் உள்ளதால் அவர்களுக்காகவும் சேர்த்து தான் நாங்கள் பேசுகிறோம்.

    நாங்கள் எப்போதும் முஸ்லிம்களுக்காக மட்டும் பேசுவதாக நினைத்திருந்தால் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்த உடனேயே பிரதமர் மோடியின் தலையை எடுத்திருப்போம். உள்துறை அமைச்சர் அமித்ஷா உயிரோடு இருந்திருக்க மாட்டார்.

    இந்த நேரம் பாராளுமன்றம் பாராளுமன்றமாக இருந்திருக்காது. இந்த பிரசார கூட்டத்தில் இருக்கும் உளவுத்துறையினர் குறித்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து பேசுவது போன்று அந்த வீடியோ பதிவு இடம்பெற்றிருந்தது.

    இந்த வீடியோ பதிவை பார்த்த பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இதனை வீடியோ பதிவாக்கிய மங்களமேடு போலீசாரிடம் இருந்தும், பெரம்பலூர் மாவட்ட உளவுத்துறை போலீசாரிடம் இருந்தும் முகமது ஷெரீப் பேசிய முழு வீடியோவையும் சென்னை காவல்துறை தலைமையகம் கேட்டு பெற்றது. அந்த வீடியோவை முழுமையாக ஆய்வு செய்த போலீஸ் உயர் அதிகாரிகள் முதற்கட்டமாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

    இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மத உணர்வை தூண்டும் வகையிலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திருச்சியை சேர்ந்த முகமது ஷெரீப்பை கைது செய்வதற்கான முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கினர்.

    அதன்படி இன்று காலை திருச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து டி.எஸ்.பி. தேவராஜன் தலைமையிலான போலீசார் முகமது ஷெரீப்பை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக மங்கள மேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அவர் மீது கொலை மிரட்டல், மத உணர்வை தூண்டும் வகையில் பேசுதல், பிரிவினைவாதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்து பேசிய த.மு.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே த.மு.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறுகையில், இப்படி ஒரு சர்ச்சை பேச்சை யார் பேசியிருந்தாலும் த.மு.மு.க. ஏற்காது. முகமது ஷெரீப் பேசிய விபரங்கள் குறித்து முழுமையாக விசாரித்து அவர் மீது த.மு.மு.க. சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    Next Story
    ×