search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில் முத்துக்குமார்
    X
    செந்தில் முத்துக்குமார்

    ராசிபுரத்தில் அரசு பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் கைது

    ராசிபுரத்தில் அரசு பள்ளிக்கு குடிபோதையில் வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் அண்ணாசாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக மாதேஸ்வரன் (வயது 53) உள்ளார். திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டி அம்மையப்பன் நகரை சேர்ந்த செந்தில் முத்துக்குமார் (44) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இப்பள்ளியில் கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி குடிபோதையில் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியருக்கும், கலை ஆசிரியருக்கும் இடையே ஏற்கனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் செந்தில் முத்துக்குமார் மது அருந்திய நிலையில் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் அறைக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்திட சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததை அறிந்த தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் அவரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில் முத்துக்குமார் தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி ராசிபுரம் போலீசில் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் பள்ளிக்கு வந்த கலை ஆசிரியர் செந்தில் முத்துக்குமாரை கைது செய்தனர்.

    பிறகு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். குடிபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர், தலைமை ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் ராசிபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×