search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொடைக்கானலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் - வாலிபர் கைது

    கொடைக்கானலில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் கடை வைத்திருப்பவர்கள் இமானுவேல், அபுதாஹீர் இவர்கள் கடைக்கு கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பொருட்கள் வாங்க வந்தனர். அப்போது ஒரு வாலிபர் கொடுத்த ரூ.200 நோட்டு சந்தேகமான முறையில் இருந்ததால் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்னூத்தி பகுதியைச் சேர்ந்த அமர்ஷா என தெரிய வந்தது.

    அவருடன் 16 சுற்றுலா பயணிகளும் வேனில் வந்துள்ளனர். ஆனால் கள்ள நோட்டு தொடர்பாக அவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிய வந்தது. அமர்ஷாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்ட அமர்ஷா மீது கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், நித்திஷ் ஆகியோருடன் மது, கஞ்சா உள்ளிட்ட சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். தற்போது சுற்றுலாவுக்கு வந்த அமர்ஷாவிடம் அவர்கள் 2 பேரும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை கொடுத்துள்ளனர்.

    இதனை பல்வேறு பகுதிகளில் மாற்றியுள்ளார். தற்போது ஏரிச்சாலையில் உள்ள ஒரு கடையில் மாற்ற முயன்ற போது சிக்கிக் கொண்டார். போலீசார் 6 ரூ.200 கள்ள நோட்டுகளையும், சுற்றுலா வந்த வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக சுற்றுலா தலங்கள், வியாபார சந்தைகளில் அதிகம் புழக்கத்தில் விடப்படுகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×