search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை (கோப்புப்படம்)
    X
    மேட்டூர் அணை (கோப்புப்படம்)

    117 அடியை எட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம்

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. 2 அணைகளில் இருந்தும் தற்போது 11 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நாளுக்கு நாள் நீர்வரத்து சரிந்து வந்தது.

    இந்த நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் தண்ணீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 15 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு காவிரி ஆற்றில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 116.53 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை மேலும் உயர்ந்து 116.93 அடியாக இருந்தது. பிற்பகலில் 117 அடியை தாண்டியது.

    மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3 அடி தண்ணீரே தேவைப்படுவதால் ஒருவாரத்தில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×