search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்பு பணிக்காக இறக்கி வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை படத்தில் காணலாம்.
    X
    ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்பு பணிக்காக இறக்கி வைக்கப்பட்டுள்ள எந்திரங்களை படத்தில் காணலாம்.

    கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாய் பராமரிப்பு பணிக்காக எந்திரங்கள் வருகை- போலீஸ் குவிப்பு

    கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக எந்திரங்கள் வந்து இறங்கியதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. 2017-ம் ஆண்டு ஜுன் 30-ந் தேதி மேலவெளிப்பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணை வெளியேறியது.

    இதைத்தொடர்ந்து மேலும் பல இடங்களிலும் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணை வெளியேறியதால் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதனால் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி கடந்த 2 ஆண்டுகளாக கிராம மக்கள், விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதனால் போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கதிராமங்கலம் மேலவெளி பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்குழாய் கிணறு பகுதியில் பராமரிப்பு பணிகள் செய்வதற்காக எந்திரங்கள் நேற்று வந்து இறங்கின. மேலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கதிராமங்கலம் பகுதியில் வருகிற 26-ந் தேதி முதல் மராமத்து பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தக்கூடும் என்ற தகவல் பரவியதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் தெரிவித்தார்.
    Next Story
    ×