search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்.
    X
    டிடிவி தினகரன்.

    நாங்குனேரி-விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டி- தினகரன் அறிவிப்பு

    நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிகளில் நிச்சயம் அ.ம.மு.க. போட்டியிடும் என்று தினகரன் கூறியுள்ளார்.

    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எங்கள் கட்சியை பதிவு செய்யும் பணியில் இருப்பதால் தான் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்து அதன்பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இருக்கிறோம்.

    கட்சியை பதிவு செய்த பிறகு நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிகளில் நிச்சயம் அ.ம.மு.க. போட்டியிடும்.

    ஆவின் பால் விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் அகம்பாவத் தோடு பேசாமல், ஏழை- எளிய மக்களை பாதிக்கின்ற பால்விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை.

    அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சொல்லியுள்ளது. அதுவரை காத்திருப்போம்.

    மாவட்டங்கள் பிரிக்கப்படுவதில் தவறில்லை. ஏனென்றால் அது நிர்வாகத்திற்கு வசதியாக இருப்பதோடு அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் வருவதோடு அந்த பகுதிகளும் மேம்பாடு அடையும். அதுபோல மயிலாடுதுறையை மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதுபோல மக்கள் விரும்புகின்ற கோரிக்கை விடுக்கின்ற பகுதிகளில் மாவட்டங்களை நியாயமான முறையில் பிரிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.

    லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான் மாவட்டங்களை பிரிக்கிறார்கள் என்று ஸ்டாலின் சொன்னதாக சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும். அதனால் அதுகுறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×