search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது - அமைச்சர் பாண்டியராஜன்

    கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
    மதுரை:

    தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் இளந்தமிழர் இலக்கியப்பட்டறை நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த பட்டறையின் 2-ம் நாள் நிகழ்ச்சி நேற்று காலையில் தொடங்கியது. இதில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார். அவர் தமிழ் வாழ்க்கைப்பணி என்ற தலைப்பில் பேசியதாவது:-

    இணையதளம் மூலம் தகவல்களை பரிமாற தொடங்கிய பிறகு, தாய்மொழி பயன்பாடு குறைந்து வருகிறது. மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி 2001-11-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட நாட்களில் தமிழ் மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. அதேவேளையில் இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை 322 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு கூறுகிறது. ஒரு மொழியின் வளர்ச்சியானது, அந்த மொழியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை பொறுத்தது.

    உலகஅளவில் 3 ஆயிரம் மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக யுனெஸ்கோ ஆய்வில் தெரியவந்துள்ளது. மொழியின் வளர்ச்சிக்கு புதிய சொற்கள் அவசியம். உலக அளவில் எந்த மொழிச்சொற்களாக இருந்தாலும், அதற்கு இணையான ஆங்கிலச்சொல் உடனடியாக அறிமுகமாகிறது. தமிழிலும் புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியாக ‘சொற்குவைத்திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

    வேலைவாய்ப்புகள்

    தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் பலரிடம் உள்ளது. கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. இதற்கான திறமையை வளர்த்துக்கொள்வது அவசியம். எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் முழுமையான அறிவை வளர்த்தல், வேலைவாய்ப்புக்கான பண்பு, திறனை வளர்த்துக் கொள்வது, பழக்க வழக்கங்கள் இவை தான் வாழ்க்கைப்பணியைப் பெறுவதற்கு அடிப்படை ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கருணாஸ் எம்.எல்.ஏ., பேராசியர் கு.ஞானசம்பந்தம், பாடலாசிரியர் முத்துலிங்கம், அன்பு செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×