search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவா எம்பி
    X
    சிவா எம்பி

    பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியாகும்- சிவா எம்பி பேட்டி

    பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியில் போகும் அபாயம் உள்ளது என்று திருச்சி சிவா எம்பி கூறியுள்ளார்.

    திருச்சி:

    மத்திய அரசு பாதுகாப்பு துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதற்கு முயற்சி செய்வதை கண்டித்து பாதுகாப்பு துறை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக வருகிற 20-ந் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பாதுகாப்பு துறை தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் திருவெறும்பூர் கடைவீதியில் மத்திய அரசை கண்டித்து துப்பாக்கி தொழிற்சாலை கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், பாதுகாப்பு துறை நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவது பாதுகாப்புக்கு கேள்விக்குறியாகவும், அச்சுறுத்தலாகவும் இருக்கும். பாதுகாப்பு துறை நிறுவனங்களை அரசு நடத்துவதற்கு லாப நஷ்ட கணக்கு பார்க்கக் கூடாது.

    தற்போது பொதுத்துறை நிறுவன சொத்துகளை விற்பதன் மூலம் ரூ.1 லட்சம் கோடி ஈட்டுவதற்கு முடிவு செய்துள்ளது. அதற்கு படைக்கலன் தொழிற்சாலையில் உள்ள இடங்களை விற்பதற்கு முடிவு செய்துள்ளது என்றார்.

    இந்தியாவில் உள்ள பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் வரும் காலத்தில் ராணுவத்திற்கு தேவையான தளவாட கருவிகளை தயாரிப்பதை தனியாருக்கு தாரைவார்க்க நினைப்பது தவறானதாகும். பாதுகாப்பு துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டால் ராணுவ ரகசியங்கள் வெளியில் போகும் அபாயம் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு, வருங்கால சந்ததிகளின் நலனை கருதி பாதுகாப்பு துறை நிறுவனத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி தொழிற்சாலை, எச்.ஏ.பி.பி. தொழிற்சாலை மற்றும் பாய்லர் தொழிற்சாலையை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×