search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய கொடி
    X
    தேசிய கொடி

    நீலகிரி, கோவை, திருப்பூரில் சுதந்திர தினவிழா கோலாகல கொண்டாட்டம்

    இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
    கோவை:

    நாடு முழுவதும் இன்று 73-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    கோவை வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், டி.ஐ.ஜி. கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், துணை கமி‌ஷனர்கள் பாலாஜி சரவணன், பெருமாள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஆயுதப்படை போலீஸ், தீயணைப்பு படை வீரர்கள், சாலை பாதுகாப்பு படை பிரிவு, ஊர்காவலர் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் தியாகிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். பின்னர் மாற்றுத்திறனாளிகள், தாட்கோ, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகள் சார்பில் 129 பயனாளிகளுக்கு 4 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 251 மதிப்பிலான உதவிகளை வழங்கினார். கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம், கோலாட்டம், தேசபக்தி பாடல்கள், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கிராமிய பாடல்கள், பிரமிடு, கரகாட்டம் உள்ளிட்டவைகள் கண்ணை கவர்ந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

    கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. கோவை மாநகராட்சி கமி‌ஷனர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தேசியை கொடியை ஏற்றி வைத்தார். துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநகராட்சியில் 25 ஆண்டுகள் நேர்மையாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை மாநகராட்சி கமி‌ஷனர் வழங்கினார். இதைதொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

    இதேபோல் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசிய கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    சுதந்திர தினத்தையொட்டி நீலகிரிஅரசு கலைக்கல்லூரி மைதானம், கோவை வ.உ.சி. மைதானம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மைதானம் ஆகியவைகள் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 3 மாவட்டங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×